சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கவிதைப்போட்டி! – கட்டுமானத் தொழிலாளி முதல் பரிசு;தமிழர்களின் தாய்மொழிப் பற்று!

Dialogue series Tamil Desmond Lee
(PHOTO: Deccan Chronicle)

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கவிதைப் போட்டியில் இரண்டு தமிழர்கள் முதல் இரண்டு பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.36 வயதான குமார் மாரிமுத்து என்ற நபர் கடந்த பத்து ஆண்டுகளாக காதல் தோல்வியைப் பற்றிய கவிதையை ‘வலி’ என்ற தலைப்பில் இயற்றியிருந்தார்.

கட்டுமானத் துறையில் பணிபுரியும் இவர் போட்டியில் கலந்து கொண்டு கவியாற்றலை வெளிப்படுத்தி முதல் பரிசாக $1,000 பெற்றார்.

பள்ளிப்பருவத்திலிருந்து வாசிப்பு பழக்கம் கொண்டிருந்த இவர் பார்த்திபன் கனவு,சிவகாமி சபதம்,பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை படித்து வந்துள்ளார்.சிங்கப்பூருக்கு வந்த பின்பும் அவரது தமிழ்ப்பற்று குறையவில்லை.

சிங்கப்பூரின் தமிழ்க் கவிஞர் அமைப்பான கவிமாலையில் இணைந்து கவிதைகளை எழுதி வந்தார்.பரிசுத் தொகையைக் கொண்டு மேலும் பல புத்தகங்களை வாங்கிப் படிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

இரண்டாவது பரிசைப் பெற்ற 48 வயது சின்னச்சாமி 25 வருடங்களாக சிங்கப்பூரில் பணிபுரிகிறார்.கவிமாலை இயக்கத்தில் சேர்ந்த பின்னர் இதுவரை 5 கவிதை நூல்களைப் படைத்து வெளியிட்டுள்ளார்.கவிதைக்காக கிடைத்தப் பரிசுத் தொகையை தனது பிள்ளைகளுக்காக செலவிடப் போவதாகத் தெரிவித்தார்.