சிங்கப்பூரில் சீக்கிரம் முன்னேறும் தமிழ் மொழி – தமிழ் மொழி விழா பற்றி பேசிய விக்ரம் நாயர்

சிங்கப்பூரில் சுமார் 1,98,000-க்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு தமிழ் மக்கள் சங்கங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகர் குழுவின் தலைவரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. விக்ரம் நாயர் “சிங்கப்பூரில் தமிழ் மொழி எதிர்காலத்தில் அதி வேகத்தில் முன்னேறும் என்பதற்கான அறிகுறிகளை தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள் பிரதிபலிக்கின்றன ” என்று கூறினார்.

தமிழ் மொழி விழாவை வெற்றிகரமாக நடத்திய ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று முன்தினம் விருந்து உபசரிப்பு விழாவை வளர்தமிழ் இயக்கம் நடத்தியது. இந்த நிகழ்வில் ஏறத்தாழ 100 பேர் கலந்து கொண்டனர்.

“சிங்கப்பூர் தமிழர்களிடையே முக்கியமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் தமிழ் மொழியை வாழும் மொழியாக வைத்திருப்பது அவசியமாகும். நமது அடையாளமே மொழிதான். அதனைத் தொடர்ந்து பேணிக்காக்கும் பொறுப்பு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் அனைவருக்கும் இருக்கின்றது ” என்று தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவரான விக்ரம் நாயர் வலியுறுத்தினார்.

வளர்தமிழ் இயக்கத்தின் தலைவரான மனோகரன் “வளர்தமிழ் இயக்கம் தொடர்ந்து இளைஞர்கள் தமிழ் மொழியில் உரையாடுவதற்கு ஊக்குவிக்க அவர்களுடைய விருப்பங்களுக்கு ஏற்றார்போல பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும். எழுத்து தமிழ் மட்டுமல்லாமல் பேச்சுத் தமிழையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்” என்று கூறினார்.

தமிழ் மொழி விழாவில் கலந்துகொண்ட அமைப்புகளுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ் மரபை பறைசாற்றும் விதமாக பரதநாட்டியம்,ஒயிலாட்டம் போன்ற படைப்புகளை விழாவில் வழங்கினர். தமிழர் எங்கு சென்றாலும் ஒற்றுமையுடன் செயல்படும் செய்தியைக் கேட்கும்போது பெருமையாகத்தான் இருக்கிறது.