தமிழ் அவசியம்-சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் இளைஞர்கள் மாநாடு

Promoting Tamil in southeast Asia

சிங்கப்பூரில் ‘சிங்கப்பூர் தமிழ் இளைஞர்கள் மாநாடு 2022’ மெய்நிகர் வாயிலாக ‘நாளைய தலைவர்களின் குரல்’ என்ற கருப்பொருளுடன் நடந்து வருகிறது.சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் செயற்குழு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

ஜூலை 3-ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த மாநாட்டில் 16 முதல் 27 வயது வரையுள்ள உயர்நிலைப் பள்ளி,பல்கலைக்கழக மாணவர்கள்,முழு நேர தேசிய தொண்டர்கள்,இளம் தொழிலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

சிங்கப்பூரில் ஒவ்வோர் இளையரும் தமிழ்ச் சமூகத்திற்கு எப்படியெல்லாம் பங்காற்றலாம் என்பது பற்றி ஆராயவேண்டும் என்று தகவல் தொடர்பு,சுகாதார மூத்தத் துணை அமைச்சர் ஜனில் கூறினார்.மேலும் தமிழர்களின் அடையாளத்தை முன்னிறுத்த தமிழ்மொழிக் கற்றல் அவசியம் என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரின் ஒருங்கிணைந்த சமூகத்தில் தமிழர்களின் அடையாளத்தை நிலைப்படுத்த தமிழ் மொழியின் பல்வேறு கூறுகளை அலசி ஆராய்ந்து அவற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறிய ஜனில் ,இந்த மாநாடு போன்ற முயற்சிகள் வரவேற்கத் தக்கவை என்றார்.

சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுகிறது.2012 முதல் நடத்தப்பட்டு வரும் இந்த மாநாடு நான்காவது முறையாக நடைபெறுகிறது.எதிர்வரும் ஜூலை 9-ஆம் தேதி மாலை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அரங்கத்தில் மாநாட்டின் நிறைவு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.