‘அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுடன் தமிழக முதலமைச்சர் சந்திப்பு’- இருவரும் ஆலோசித்தது என்ன?

Photo: TN GOVT

 

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 24) மதியம், சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனைச் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி, டாக்சி மோதி கடும் விபத்து: ஊழியர் உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

இந்த சந்திப்பின் போது, அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், வழக்கமான முதலீடுகள் தவிர பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது குறித்தும், செமிகண்டக்டர்கள் மற்றும் எலெக்ட்ரானிக் உதிரி பாகங்களை தயாரிப்பிற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும், தமிழக முதலமைச்சரிடம் விவாதித்ததோடு, அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் ‘Fintech’ மாநாட்டிற்கு தமிழக அரசின் குழுவை அனுப்பிடவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், தமிழக முதலமைச்சர், சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்க் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் பசுமை சக்தியை உருவாக்குவது குறித்தும் பேசி வருவதாக அமைச்சர் எஸ்.ஈஸ்வரனிடம் தெரிவித்தார்.

தமிழக அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக, அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தனது பாராட்டுகளை தமிழக முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்.

சிங்கப்பூரில் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

இச்சந்திப்பின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.