கட்டிட விபத்தில் உயிரிழந்த தமிழக ஊழியருக்கு சிங்கப்பூர் அமைச்சர்கள் ஆழ்ந்த இரங்கல்!

family-of-worker-who-died-in-tanjong-pagar-worksite-collapse-to-get-ex-gratia-payout
Photo: Vinoth Kumar/ Instagram

 

கடந்த வியாழன்கிழமை மதியம் 02.00 மணியளவில் சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் பகாரில் உள்ள ஃபியுஜி செராக்ஸ் டவர்ஸ் கட்டிடம் இடிக்கப்பட்ட போது, அதன் ஒரு பகுதியில் இருந்த 10 மீட்டர் நீளமும், 3.8 மீட்டர் உயரமும் உடைய சுவர் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், பணியில் இருந்த 20- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 20 வயதான வினோத் குமாரை பேரிடர் மீட்புப் படையினர், தீவிரமாகத் தேடி வந்த நிலையில் சுமார் ஆறு மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

“இந்தியாவில் மேலும் ஒரு நகரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை… பயணக் கட்டணம் இவ்வளவு தான்”- இண்டிகோ ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!

அந்த இளைஞருக்கு சக ஊழியர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதேபோல், சிங்கப்பூர் அமைச்சர்களும் ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், சிங்கப்பூரின் மனிதவளத்துறை அமைச்சர் டான் சீ லெங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “விபத்தில் உயிரிழந்த இளைஞர் வினோத் குமாரின் குடும்பத்திற்கும், அவரது நண்பர்கள், உறவினர்கள், அவரைச் சார்ந்தவர்கள் என அனைவருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பணியிடப் பாதுகாப்பை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது நமது வாழ்க்கை பிரச்சனை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சோங் பகார் கட்டிட விபத்து: காணாமல் போன 20 வயதான இந்திய ஊழியர்… 50 டன் கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கி பரிதாப மரணம்

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது, “இளைஞர் வினோத் குமாரின் குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. பணியிட காயம் இழப்பீடு சட்டத்தின் கீழ் வினோத் குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பணியிடத்தில் பாதுகாப்பற்ற சூழல், ஊழியர்களுக்கான பாதுகாப்பில் குறைபாடு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடு கண்டால், உடனடியாக https://go.gov.sg/snapsafe என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.