சிங்கப்பூரில் 100 நாட்களுக்கு மேலாக தமிழக ஊழியரை காணவில்லை; மீட்டுத்தர மத்திய அரசிடம் கோரிக்கை!

காணாமல் போன வரதராஜனின் புகைப்படம்.

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் வரதராஜன் (28). இவர் சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவர், 9 SUNGEI KADUT AVENUE என்ற வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், அவர் கடந்த 2021 டிசம்பர் 5ம் தேதி மதியம் 02.00 மணிக்கு தங்கும் விடுதியில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு, அடுத்த நாள் (டிசம்பர் 06) இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் வரதராஜன் விடுதிக்கு திரும்பவில்லை.

இதையடுத்து, தொழிலாளர் லிம் பூன் கெங் (Lim Boon Keng), உட்லேண்ட்ஸ் டிவிஷன் தலைமை காவல் நிலையத்தில் (Woodlands Division HQ), வரதராஜனை காணவில்லை என்று புகார் அளித்தார். வரதராஜன் எங்கே இருக்கிறார் என்பது இதுவரையிலும் தெரியவில்லை.

சிங்கப்பூர் சாலையில் வாளுடன் அலப்பறை செய்த ஆடவர்; உயிரை பணயம் வைத்து மடக்கி பிடித்த 6 பேருக்கு விருது!

வரதராஜன் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்க்கு மேல் ஆகியும் இதுவரை அவர் எங்கு உள்ளார் என்ற எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றும், தன் மகனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் தமிழகத்தில் உள்ள அவரது பெற்றோர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாகவும் ராஜமாணிக்கத்தின் உறவினர் ஒருவர் நமது (தமிழ் மைக்செட் சிங்கப்பூர்) முகநூல் பக்கத்தில் தொடர்புகொண்டு சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

இந்த நிலையில், வரதராஜனின் தாய் மற்றும் தங்கையின் கணவர் ரகுநாத் ஆகிய இருவரும் சென்னைக்கு சென்று கள்ளக்குறிச்சி எம்பி கவுதமசிகாமணி, வெளிநாடு நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்.

வரதராஜனின் நிலைமை குறித்து எந்த ஒரு தகவலும் தெரியாமல் அவரது குடும்பத்தினர் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வரும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரதராஜனை மீட்டுத்தருமாறு குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சிங்கப்பூரில் வரதராஜனை யாரேனும் கண்டால் உடனடியாக +917358845118 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அளிக்குமாறு, அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருச்சி, சிங்கப்பூர் இடையே ‘ஸ்கூட்’ விமான சேவை- மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!