இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூரின் டெமாசெக் அறக்கட்டளை!

Photo: Sri Lanka Foreign Ministry

இலங்கை நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் (Foreign Ministry) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனாவைக் கட்டுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவாக சிங்கப்பூரின் டெமாசெக் அறக்கட்டளை (Temasek Foundation of Singapore) 50 பிபாப் இயந்திரங்கள் (50 BiPAP Machines) மற்றும் 8 வெண்டிலேட்டர்கள் (8 Ventilators) ஆகியவற்றை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சிங்கப்பூருக்கு வருகிறார்!

நவம்பர் 23- ஆம் தேதி அன்று கொழும்பில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வைத்து இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இந்த நன்கொடையை இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே (Foreign Secretary Admiral Prof. Jayanath Colombage), உற்பத்தி, விநியோகம் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன (State Minister of Production, Supply and Regulation of Pharmaceuticals Prof. Channa Jayasumana) மற்றும் இராஜாங்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்கே (Secretary of the State Ministry Dr.R.M.S.K.Rathnayake) ஆகியோரிடம் வழங்கினார்.

கொரோனா தொற்றுநோய் பரவல் தொடங்கியது முதல், டெமாசெக் அறக்கட்டளை இலங்கைக்கு குறிப்பிடத்தக்க மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் லிவிங்கார்ட் முகக்கவசத்தை (Livinguard Face Masks) முன்கள சுகாதார ஊழியர்களின் பயன்பாட்டிற்காக அவர்கள் முன்னதாக நன்கொடையாக வழங்கினர். டெமாசெக் அறக்கட்டளை இலங்கைக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பல துறைகளில் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றது.

விபத்து: தலைகுப்புற கவிழ்ந்த கார் (காணொளி) – சிறுவன் உள்ளிட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூரில் உள்ள இலங்கை நாட்டுக்கான தூதர் சஷிகலா பிரேமவர்த்தேனா (High Commissioner of Sri Lanka to Singapore Sashikala Premawardena) அவர்கள் டெமாசெக் பவுன்டேஷன் இன்டர்நெஷனலின் அதிகாரி பெனடிக்ட் சியோங்கிடம் (Temasek Foundation International Benedict Cheong) விடுத்த கோரிக்கையை அடுத்து டெமாசெக் அறக்கட்டளையினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடையானது ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் (Sri Lankan Airlines) விமானம் மூலம் எடுத்து வரப்பட்டதுடன், விமானப் போக்குவரத்துக்கான நிதி உதவிகள் சிங்கப்பூரில் உள்ள இலங்கை வர்த்தக சங்கத்தினால் (Sri Lanka Business Association- ‘SLBA’) வழங்கப்பட்டது.” இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.