திருக்கார்த்திகைத் தீபத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு!

திருக்கார்த்திகைத் தீபத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு!
Photo: HEB

 

வரும் நவம்பர் 26- ஆம் தேதி திருக்கார்த்திகைத் தீபத்தை (Thirukarthigai Prayers) முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ வைராவிட காளியம்மன் கோயில் ஆகிய மூன்று கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

ஜி20 மெய்நிகர் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

இது தொடர்பாக, இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் நவம்பர் 26- ஆம் தேதி திருக்கார்த்திகைத் தீபத்தை முன்னிட்டு, ஸ்ரீ சிவன் கோயிலில் அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு ஸ்ரீ விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 06.30 மணிக்கு பெரிய தீபம் ஏற்றுதலும், இரவு 08.00 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், இரவு 08.15 மணிக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

அதேபோல், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் உள்ள முருகனுக்கு வரும் நவம்பர் 26- ஆம் தேதி காலை 08.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்படும். இரவு 07.15 மணிக்கு திருக்கார்த்திகை தீப சமர்ப்பணமும், இரவு 07.45 மணிக்கு உபய பூஜையும், இரவு 08.15 மணிக்கு சொக்கப்பானையும், சுவாமி புறப்பாடும், இரவு 08.30 மணிக்கு மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 ஆண்டுகளுக்கு முன் நடந்த கலவரம்.. அப்போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய ஆடவர்.. சிங்கப்பூர் வந்தபோது கைது

திருக்கார்த்திகை தினத்தன்று, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் உள்ள முருகனுக்கு காலை 09.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12.15 மணிக்கு அன்னதானமும், மாலை 06.30 மணிக்கு பெரிய விளக்கு ஏற்றுதலும், இரவு 07.15 மணிக்கு உபய பூஜையும், சுவாமி வீதிஉலாவும், இரவு 08.00 மணிக்கு திருக்கார்த்திகைத் தீப சமர்ப்பணமும், சொக்கப்பானையும், மஹா தீபாராதனையும், பிரசாதம் விநியோகம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

திருக்கார்த்திகையை முன்னிட்டு, மேலே குறிப்பிட்டுள்ள கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு இந்து அறக்கட்டளை வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.