கோவிட்-19 வழக்குகள் அதிகரிப்பால் மருத்துவமனைகளில் பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் நேரம் குறைப்பு : சுகாதார அமைச்சகம் !

Patients in ward

தற்போது அதிகரித்து வரும் கோவிட்-19  வழக்குகளுக்கு மத்தியில் மருத்துவமனைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் கடுமையாக்கப்படும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இவை அக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரை என நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களுக்கு நேரில் சென்று வருவதற்கான கட்டுப்பாடுகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோயாளியின் படுக்கைக்கு அருகில் ஒரே ஒரு பார்வையாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மோசமான நிலையில் உள்ள நோயாளிகளின் படுக்கைக்கு அருகில் இரண்டு பேர் வரை இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. நோயாளிகளை பார்க்க வருவோர் அதிக பட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான நோயாளிகள், குழந்தைகள், பிரசவம் மற்றும் கூடுதல் கவனிப்பு தேவைப்படும். மன நலம் குன்றிய நோயாளிகள் ஆகியோருக்கு மருத்துவமனைகளின் விருப்பப்படி இவற்றில் இருந்து விதி விலக்கு தரலாம்.

மேலும். மருத்துவமனை வார்டுகளில் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம் என்றும் நோயாளிகளின் படுக்கைகளில் அமர்வதையோ அல்லது வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட கழிவறைகளை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டுமென சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 பாதிப்புகள் அதிகமானால் பார்வையாளர்கள் மொத்தமாகவும் நிறுத்தப்படலாம் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.