மூன்று வண்ணங்களில் ‘டிக்’… ட்விட்டரில் புதிய மாற்றம்!

Photo: Twitter

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், உலகப் பணக்காரர் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவருமான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். அதைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் மற்றும் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.

கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்த சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

அதேபோல், செலவுகளைக் குறைக்கும் வகையில், ட்விட்டர் நிறுவனத்தின் மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையால் சுமார் 50% பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், ட்விட்டர் நிறுவனத்தைச் சார்ந்துள்ள நிறுவனங்களும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், ட்விட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் வெரிஃபைடு எனப்படும் ப்ளூ டிக்கை 8 அமெரிக்க டாலர் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்த எலான் மஸ்க், வெவ்வேறு நிறத்தில் டிக் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக, ப்ளூ டிக் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், ட்விட்டர் இணையப் பக்கத்தில் தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் நிறைவடைந்திருந்த நிலையில், ப்ளூ டிக் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ பக்கங்களில் புதிய நிறங்கள் டிசம்பர் 14- ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவை உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது.

அடேங்கப்பா! சாங்கி விமான நிலையத்தில் குவியும் பயணிகள்! – அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உரை

அதன்படி, ப்ளூ, கோல்டு, கிரே ஆகிய மூன்று நிறங்களில் டிக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று நிறங்களுக்கான விளக்கத்தையும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ப்ளூ நிறம் தனி நபரின் கணக்கைக் குறிக்கிறது. கோல்டு நிறம் வணிக ரீதியான ட்விட்டர் கணக்கைக் குறிக்கிறது. கிரே நிறம், அரசாங்கம் தொடர்பான கணக்கைக் குறிக்கிறது.

முன்னதாக, ட்விட்டரில் வெரிஃபைடு கணக்குகள் அனைத்தும் ப்ளூ நிறத்தில் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.