ட்விட்டர் நிறுவனத்தைவிட்டு வெளியேறும் ஊழியர்கள்…!

File Photo

டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ட்விட்டரில் பல்வேறு புதிய மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக, ட்விட்டர் பக்கம் வைத்திருப்பவர்களில் ப்ளூ டிக் வாங்கியவர்கள் மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளார்.

திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் பட்டியல்!

மேலும், ட்விட்டர் நிறுவனம் அதிக லாபம் ஈட்டும் வகையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள எலான் மஸ்க், ஊழியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருப்பது உலகளவில் உள்ள ஐடி நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திடீரென்று இ- மெயில் அனுப்பினார்.

அதில், ட்விட்டர் நிறுவனம் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதால், ஊழியர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும். அதற்கு தயாராக இருக்கும் ஊழியர்கள் கடந்த வியாழன்கிழமைக்குள் இ-மெயிலில் தங்களின் ஒப்புதலை அனுப்பலாம். மற்றவர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைக் கண்ட ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். அத்துடன், ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அழுத்தம் கொடுத்ததன் காரணமாக, ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை எலான் மஸ்க்- க்கு தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். அதேபோல், தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களிலும் ராஜினாமா தொடர்பான அறிவிப்பை ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள், சல்யூட் இமோஜிகளைக் குறிப்பிட்டு, பதிவு செய்து வருகின்றனர்.

“70 வயதான இந்தியரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

‘señorita awesome’ என்ற ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ட்விட்டரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன். உங்கள் அனைவருடனும் பணிபுரிவது ஒரு உண்மையான பாக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தில் சர்வதேச அளவில் சுமார் 7,000- க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்த நிலையில், 3,500 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இதில் 180 பேர் இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் கிளையில் பணிப்புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால் எலான் மஸ்க்கின், ட்விட்டர் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தைச் சார்ந்துள்ள ஐடி நிறுவனங்களிலும் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனம், அமெரிக்காவின் சிலிக்கான் சிட்டி என்றழைக்கப்படும், சான் ஃப்ரான்சிஸ்கோ- வை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது என்பது நினைவுக்கூறத்தக்கது.