அமெரிக்க துணை அதிபர் நாளை சிங்கப்பூர் வருகிறார்!

Photo: US Vice President Kamala Harris Official Twitter Page

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்று நாள் அரசு முறை பயணமாக நாளை (22/08/2021) சிங்கப்பூர் வருகிறார். நாளை (22/08/2021) முதல் வரும் ஆகஸ்ட் 24- ஆம் தேதி வரை சிங்கப்பூரில் பல்வேறு தலைவர்களையும், தொழிலதிபர்களையும் அமெரிக்க துணை அதிபர் சந்திக்க உள்ளதாக தகவல் கூறுகின்றன.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரை சந்திக்கும் அமெரிக்க துணை அதிபர், சிங்கப்பூர்- அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்துவது, கொரோனா பாதிப்பு, கொரோனா தடுப்பூசிகள், இரு நாடுகள் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, உலகளாவிய பிரச்சனைகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாத 82 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு!

மேலும், இஸ்தானாவில் நடைபெறும் சடங்கில், புதிய ரக ஆர்க்கிட் மலர் ஒன்றுக்குத், கமலா ஹாரிஸின் பெயர் சூட்டப்படுகிறது. சாங்கி கடற்படைத் தளத்துக்குச் செல்லவிருக்கும் அவர், அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றிலும் ஏறிப் பார்வையிடவிருக்கிறார்.

வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் உட்பட, சிங்கப்பூரின் வர்த்தகச் சமூகத்தினருடன் நடைபெறவிருக்கும் வட்ட- மேசைச் சந்திப்பிலும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துக் கொள்கிறார்.

அமெரிக்க துணை அதிபரின் சிங்கப்பூர் பயணத்தின் போது, இரு நாடுகள் இடையேயான பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகக்கவசம் அணிய மறுத்த ஆடவர்: சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பிய சிங்கப்பூர்…நிரந்தர தடையும் விதிப்பு.!

பின்னர் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகஸ்ட் 24- ஆம் தேதி வியட்நாம் செல்கிறார். அங்கு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பின்பு, அமெரிக்கா திரும்புகிறார். வியட்நாம் நாட்டிற்கு செல்லும் முதல் அமெரிக்க துணை அதிபர் என்ற பெருமையை  கமலா ஹாரிஸ் பெறுகிறார்.

இதனிடையே, கமலா ஹாரிஸின் வருகையையொட்டி, சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, சாங்கி விமான நிலையம் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் இரண்டாவது அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் வியட்நாமுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் ஆசியாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை ஆகும்.