தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாத 82 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு!

Photo: Facebook/Alexandra Hospital

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளதால், கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இது மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசிப் போடும் பணி தீவிரமடைந்துள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றன. குறிப்பாக, கொரோனா தடுப்பூசிப் போடுவதில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத முதியவர்களுக்கு நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் 52 வயது பெண் பாலியல் பலாத்காரம்: சந்தேகத்தில் 28 வயது ஆடவர் கைது.!

தற்போதைய நிலவரப்படி, மொத்த மக்கள் தொகையில் 76%- க்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் 100% கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளோம் என்ற இலக்கை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் வசித்து வரும் 82 வயது முதியவருக்கு கடந்த ஜூலை மாதம் 30- ஆம் தேதி கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டன. அதைத் தொடர்ந்து, ஜூலை 31- ஆம் தேதி முதியவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியான நிலையில், அன்றைய தினமே அலெக்ஸாண்டிரா மருத்துவமனையில் (Alexandra Hospital) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஆகஸ்ட் 19- ஆம் தேதி அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாராலிம்பிக் போட்டி: டோக்கியாவிற்கு புறப்பட்ட சிங்கப்பூர் வீரர்கள்.!

இது தொடர்பாக சுகாதாரத்துறை கூறியதாவது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முதியவருக்கு இதயநோய், சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய இணைநோயால் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை கூட இவர் போட்டுக் கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இதில், இந்த மாதத்தில் மட்டும் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.