முகக்கவசம் அணிய தவறிய பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

JUDGEMENT

 

53 வயதான ஃபூன் சியூ யோக் (Phoon Chiu Yoke). இந்த ஆண்டு ஜூன் 25- ஆம் தேதி அன்று மதியம் 03.00 மணியளவில் மாண்டரின் ஆர்ச்சர்ட் சிங்கப்பூர் ஹோட்டலில் (Mandarin Orchard Singapore Hotel) முகக்கவசம் அணியத் தவறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று (24/07/2021) விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு வழங்கப்பட்டிருந்த 12,000 சிங்கப்பூர் டாலருடன் கூடிய ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, ஃபூன் சியூ யோக் காவலில் வைக்கப்பட்டார். பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தவறியது மற்றும் கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய போது 14 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பை (Stay-Home Notice- ‘SHN’) மீறியது உட்பட மொத்தம் 22 குற்றச்சாட்டுகளை அவர் இப்போது எதிர்கொள்கிறார்.

மெரினா பே சாண்ட்ஸில் (Marina Bay Sands- ‘MBS’).பாதுகாப்பான தொலைதூர தூதருடன் (Safe Distancing Ambassador) அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ஆன்லைனில் வைரலானது. அதில் ஃபூன் சியூ யோக் முகக்கவசம் அணியாதது தெரிய வந்தது. அதேபோல், கடந்த ஆண்டு மே 8- ஆம் தேதி நியூட்டன் ஹாவ்கேர் மையத்தில் (Newton Hawker Centre) “எல்லா நேரங்களிலும்” தனது மூக்கு மற்றும் வாய்க்கு மேல் ஃபூன் சியூ யோக் முகக்கவசம் அணியவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் 28- ஆம் தேதி முதல் முதல் ஜூலை 12- ஆம் தேதி வரை வரை ஐந்து சந்தர்ப்பங்களில் தனது கட்டாயம் வீட்டு தனிமையை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், ஜூலை 8- ஆம் தேதி இரண்டு முறை மெரினா பே சாண்ட்ஸில் உள்ள தனது அறையை விட்டு வெளியேறியதாகவும், ஜூன் 28, ஜூலை 5 மற்றும் ஜூலை 9 ஆகிய தேதிகளில் தலா ஒரு முறை வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

“தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுங்கள்; தாமதிக்க வேண்டாம்”- பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தல்!

இதனிடையே, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (Immigration and Checkpoints Authority (‘ICA’) அழைப்புகள் (Calls) மற்றும் மின்னஞ்சல்களுக்கு (e-mail) ஃபூன் சியூ யோக் பதிலளிக்கத் தவறியதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு முன்னர் தன்னை அணுகிய குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரியுடன் பேசவும் அவர் மறுத்துவிட்டார்.

அவர் கோவிட் -19 நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவ்வாறு அவர் செய்யத் தவறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஃபூன் சியூ யோக்கின் ஜாமீனை நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

அவருக்கு எதிராக மொத்தம் 22 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் ஜூலை 26- ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா பரவல் தொடர்ந்து தற்போது அதிகரித்துள்ள நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பொது மக்களின் ஒத்துழைப்பு இந்த கால கட்டத்தில் இன்றியமையாததாக உள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஃபூன் சியூ யோக்-க்கு கோவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் (அல்லது) 10,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் (அல்லது) சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகிய இரண்டும் விதிக்கப்படலாம்.