250 பேரை வேலைக்கு எடுக்கும் பிரபல விமான நிறுவனம்!

Photo: Pratt & Whitney

உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் சர்வதேச விமான போக்குவரத்தைத் தொடங்க அனுமதி அளித்துள்ளனர். இதனால் விமான நிறுவனங்கள் மீண்டும் விமான போக்குவரத்தைத் தொடங்கியுள்ளன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பொருளாதார ரீதியிலான பாதிப்பைச் சந்தித்த விமான நிறுவனங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், விமான நிறுவனங்களைச் சார்ந்த தொழில் நிறுவனங்களும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு மிக அதிக மதிப்பு!

அந்த வகையில், அமெரிக்க விமான நிறுவனமான ‘பிராட் அண்ட் விட்னி’ (Pratt & Whitney) சிங்கப்பூரில் ஆறு தொழிற்சாலை அமைத்து இயங்கி வருகிறது. இந்த நிலையில், கொரோனா சூழலால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக, இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதன்படி, ஐந்து தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 400 தொழிலாளர்களைப் பணியில் இருந்து நீக்கியிருந்தது.

இந்த நிலையில், தற்போது சூழல் மாறியுள்ள நிலையில், புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது; இதற்கான பணி கடந்த சில மாதங்களாகவே தொடங்கி நடைபெற்று வருகிறது என்று ‘பிராட் அண்ட் விட்னி’ நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் சுமார் 250 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வு!

இந்த நிறுவனத்தில் பசுபிக் கிளைகளின் பிரிவுத் துணைத் தலைவரான டிம் கோர்மியர் கூறுகையில், “புதிதாக வேலைக்கு தேர்வு செய்யப்படுவோரில் பெரும்பாலானோருக்குக் குறிப்பிட்டத் தொகை சம்பளமாக வழங்கப்படாது. மாறாக, பணியில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் கணக்கிட்டு சம்பளம் வழங்கப்படும். ஆட்குறைவு செய்யப்பட்டபோது, தொழிலாளர்கள் விட்டுச் சென்றப் பணிகளையும், புதிய பணிகளையும், புதிதாக வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு வழங்கப்படும்” என்றார்.

புதிதாக வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், நிறுவனத்தின் இயந்திர பராமரிப்பு பிரிவு, பழுது பார்ப்புப் பிரிவுகளில் பணியாற்றுவர் எனக் கூறப்படுகிறது.

‘பிராட் அண்ட் விட்னி’ நிறுவனத்தின் சிங்கப்பூர் தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 2,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றன.