‘வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு’- மன்னிப்புக் கேட்ட ‘StarHub’ நிறுவனம்!

Photo: Sulaiman Daud.

 

உலகில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நொடிக்கு நொடி வளர்ந்து வரும் நிலையில், இணையதளங்கள் மூலம் நடைபெறும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இத்தகைய குற்றச்சம்பவங்களைத் தடுப்பதில் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. போலி இணையதளங்கள் மூலம் பணப்பறிப்பு போன்ற குற்ற சம்பவம் அதிகரித்துள்ளன. குறிப்பாக, சிங்கப்பூரில் கடந்த சில தினங்களாக போலி இணையதளங்கள் மூலம் சிங்கப்பூர் மக்கள் பல்லாயிரம் சிங்கப்பூர் டாலர்களை இழந்துள்ளன. இது தொடர்பாக, பொதுமக்களுக்கு அவ்வப்போது சிங்கப்பூர் காவல்துறையினரும், வங்கிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்: சமூக ஒன்றுகூடலில் அதிக நபர்கள் பங்கேற்க அனுமதி!

மேலும், பண மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 100- க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், சிங்கப்பூரில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று ‘StarHub’ நிறுவனம். இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்களில் 57,000 பேரின் அடையாள அட்டை எண், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் கசிந்துள்ளதாக ‘StarHub’ நிறுவனம் நேற்று (06/08/2021) வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

‘StarHub’ நிறுவனத்தின் அறிக்கையில், “வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்தது குறித்து ‘StarHub’ நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பு குழு ஜூலை 6- ஆம் தேதி அன்று நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்கள் அடங்கிய கோப்பு சட்டத்திற்குப் புறம்பாக, மூன்றாம் தரப்பு இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகவல் கசிந்த வாடிக்கையாளர்கள் 2007- ஆம் ஆண்டுக்கு முன்பு ‘StarHub’ சேவைகளுக்கு சந்தா செலுத்தியவர்கள்” எனத் தெரிவித்துள்ளது.

வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்கு வர அனுமதி.!

இந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட ‘StarHub’ நிறுவனத்தின் தலைமை அதிகாரி நிகில் ஈபன் (Mr Nikhil Eapen, StarHub’s Chief Executive), “தகவல் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் தனியுரிமை ஆகியவை ‘StarHub’- க்கு முக்கியமான விஷயங்கள். நாங்கள் வெளிப்படையாக இருப்போம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் ஆதரவை வழங்குவோம். வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய எங்கள் நிறுவனம் தொடர்ந்து அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கும். நீண்டகால பாதுகாப்பு மேம்பாடுகளை செயல்படுத்துவதற்கும், துரிதப்படுத்துவதற்கும் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

“கசிந்த வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட ஆவணங்களில் உள்ள எந்த தகவலும் தீங்கிழைக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை” என்று தொலைத்தொடர்பு நிறுவனமான டெல்கோ (Telco) கூறியுள்ளது.