56- வது தேசிய தினம்- சிங்கப்பூரில் கோலாகல கொண்டாட்டம்!

Photo: PM Lee Hsien Loong Official Facebook Page

 

சிங்கப்பூரின் 56- வது தேசிய தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தேசிய தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், இன்று (09/08/2021) காலை 09.00 மணியளவில் Float@Marina Bay-ல் தேசிய தின சடங்குபூர்வ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற நிலையில், ராணுவம், கடற்படை, விமானப் படை, காவல்துறை, குடிமைத் தற்காப்புப் படை, கொடி அணி, கௌரவக் காவல் அணி உள்ளிட்ட படைகளைச் சேர்ந்த வீரர்கள் மிடுக்கான நடையுடன் அணி வகுப்பில் சென்றது காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. இதில் 600 வீரர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

அணி வகுப்பின் போது வீரர்கள் அனைவரும் சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினர். சிங்கப்பூரின் வரலாற்றிலேயே முதல்முறையாக, இவ்வாண்டின் தேசிய தினச் சடங்குபூர்வ அணிவகுப்பில் அணி நடைப் பிரிவினர் சிலர் இணைய மூலம் காணொளி வாயிலாக இணைந்து கொண்டனர்.

தேசிய தினம் 2021: சாங்கி விமான நிலையம் வெளியிட்ட பிரத்தியேக காணொளி.!

அரசு பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்களப்பணியாளர்கள் சிலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எனினும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நிகழ்ச்சியை பொதுமக்கள் வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் தொலைக்காட்சிகள் மூலம் நேரலை செய்யப்பட்டது. தேசிய தின சடங்குப் பூர்வ அணி வகுப்பு நிகழ்ச்சியில் நான்காவது முறையாக அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துக் கொண்டார். முன்னதாக, பிரதமர் லீ சியன் லூங், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அணி வகுப்பை காண வந்திருந்தனர்.

நாட்டின் பலத்தை உலகிற்கு பறைச்சாற்றும் வகையில் விமானப் படை விமானங்கள் வானில் சாகசம் செய்தனர். அதேபோல், ஹெலிகாப்டர்கள் தேசிய கொடியை ஏந்தி சென்றனர். 21 பீரங்கி குண்டு முழக்கம் என வழக்கமான அம்சங்களுக்குக் குறைவில்லாமல் நடந்தேறியது இவ்வாண்டின் தேசிய தின சடங்கு பூர்வ அணிவகுப்பு நிகழ்ச்சி.

மின்சாரத்தில் இயங்கும் கார் டாக்சிகளை அறிமுகப்படுத்தும் ‘SMRT’ நிறுவனம்!

வழக்கமாக தேசிய தின நாளில் மாலையில் நடக்கும் அணி வகுப்பு நிகழ்ச்சி, இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் வரும் ஆகஸ்ட் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.