ஆப்கானிஸ்தானில் மீட்பு பணி: களமிறங்கிய சிங்கப்பூர் விமானப் படை விமானம்!

File Photo

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலிபான்களின் ஆட்சி அமைந்திருப்பதால், அங்கிருந்து வெளிநாடுகளின் தூதர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், காபூலில் செயல்பட்டு வந்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன. ரஷ்யா உள்ளிட்ட ஒரு சில நாடுகளைத் தவிர பிற நாட்டுத் தூதரகங்கள் மூடப்பட்டுவிட்டன.

அதேபோல், ஆப்கான் மக்கள், வெளிநாட்டினர் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலம் மீட்டு வருகின்றன.

எதிர்பாராத விதமாக தொழிற்துறை இயந்திரத்தில் சிக்கிய ஊழியரின் கை – போராடி மீட்ட SCDF

அந்த வகையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள சிங்கப்பூரர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஆப்கானில் சிக்கியுள்ள சிங்கப்பூரர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைத் திறக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சிங்கப்பூரர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இ- பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறித் தற்போது கத்தாரில் இருப்பவர்களை சிங்கப்பூர் விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது. இதற்காக, சிங்கப்பூரின் சாங்கி விமானப் படை தளத்தில் இருந்து சிங்கப்பூரின் A330 Multi-Role Tanker Transport (‘MRTT’) என்ற விமானம் நேற்றிரவு (26/08/2021) கத்தாருக்கு புறப்பட்டது.

கட்டுமான இயந்திரத்தை திருடி, விற்க முயன்று பின்னர் வெளிநாட்டுக்கு ஓடிய ஆடவருக்கு சிறை

அமெரிக்கப் படையினரால் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட பலர் கத்தார் ராணுவ படைத் தளத்தில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். ஐ.நா.வின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்குப் புகலிடம் கொடுக்க ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் முன்வந்துள்ளன. தஞ்சம் கொடுக்கும் நாடுகளுக்கு அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பும் பணிகளில் சிங்கப்பூர் உதவுகிறது. இந்த மீட்பு பணியில் சுமார் 77 சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ‘MRTT’ விமானத்தில் 200- க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.