“உங்களுக்கான சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது எப்படி?”- விரிவான தகவல்!

Photo: CDC Vouchers

நடப்பாண்டு அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் 300 வெள்ளி மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் (Community Development Council Vouchers) கிடைக்கும். 2022 வரவுச் செலவுத் திட்டத்தில் பொருள் சேவை வரிக்கான உத்தரவாதத் தொகுப்பின் கீழ் அறிவிக்கப்பட்ட 200 வெள்ளி சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளும், அக்டோபர் 2022 வாழ்க்கைச் செலவுக்கான ஆதரவுத் தொகுப்பின் கீழ் கூடுதலாக வழங்கப்பட்ட 100 வெள்ளி சமூக மேமபாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளும் இதில் அடங்கும்.

அடைமழைப் பெய்தாலும் அசராமல் நின்ற மக்கள்! – ஜூரோங் பறவைகள் பூங்காவில் திரண்ட பார்வையாளர்கள்!

150 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை பங்குபெறும் உணவங்காடி கடைகளிலும், குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் செலவு செய்யலாம். இன்னொரு 150 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை பங்குபெறும் பேரங்காடிகளில் செலவு செய்யலாம். ஒவ்வொரு குடும்பத்தின் சார்பிலும் ‘சிங்பாஸ்’ கணக்கு வைத்திருக்கும் ஒரு குடும்ப உறுப்பினர், 300 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை மின்னியல் முறையில் பெற்றுக் கொள்ளலாம்.

பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது எப்படி?

go.gov.sg/cdcv என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் 2023 என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘சிங்பாஸ்’ பயன்படுத்தி உட்பதிவு செய்து, பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். 2023 சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள புதிய குறுந்தகவல் இணைப்பு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

உங்களது பற்றுச்சீட்டுகளை செலவு செய்ய, ‘ReedemSG’ அனுப்பிய குறுந்தகவல் இணைப்பைத் தட்டினால் போதும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் பற்றுச்சீட்டுகளைத் தேர்ந்தெடுங்கள். பற்றுச்சீட்டுகளைப் பங்குபெறும் உணவங்காடி கடைகளிலும் குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் (அல்லது) பங்குபெறும் பேரங்காடிகளிலும் செலவு செய்யலாம்.

நீங்கள் செலவு செய்ய விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுத்து, ‘பற்றுச்சீட்டுக் காட்டு’ என்பதைத் தட்டுங்கள். QR குறியீட்டைக் கடைக்காரரிடம் காட்டி பரிவர்த்தனையைப் பூர்த்திச் செய்யுங்கள். பங்குபெறும் உணவங்காடிக் கடைகளிலும், குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

பங்குபெறும் உணவங்காடி கடைகள் மற்றும் குடியிருப்பு வட்டார கடைகள், பேரங்காடி கடைகள் ஆகியவற்றின் முழுப் பட்டியலை go.gov.sg/cdcvouchers என்ற இணையதளத்திலும் பார்க்கலாம். 2023 சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதி வரை பயன்படுத்தலாம். எனவே, அவற்றை மறக்காமல் பயன்படுத்தி முடித்திடுங்கள்.

சிங்கப்பூருக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்!

உங்களது பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவித் தேவைப்படுகிறதா? உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட படிப்படியான வழிகாட்டியைப் பாருங்கள் (அல்லது) மின்னியல் முறையில் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு, உடனடியாக அவற்றைப் பயன்படுத்தத் தொடங்க, குடும்பத்தாரிடம் அல்லது நண்பர்களிடம் உதவிக் கேளுங்கள்.

பற்றுச்சீட்டுகளின் இணைப்பைத் தொலைத்து விட்டீர்களா? நீங்கள் மறுபடியும் சிங்பாஸ் பயன்படுத்தி உட்பதிவு செய்து, பற்றுச்சீட்டின் இணைப்பை மீட்பதற்கும் go.gov.sg/cdcv என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். உங்களிடம் கைப்பேசி மற்றும் சிங்பாஸ் இல்லாவிட்டால், அருகிலுள்ள சமூக நிலையத்திற்கு (அல்லது) சமூக மன்றத்திற்கு அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள். சமூக மன்ற ஊழியர்களும், தொண்டூழியர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு vouchers.cdc.gov.sg என்ற இணையதளத்தையோ (அல்லது) 62255322 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.