சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று சிங்கப்பூர் வருகிறார்!

Photo: Ministry Of Foreign Affairs In Singapore

 

தென்கிழக்காசியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கும் சீனா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்து கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் கூறுகின்றன.

பெரிய தொற்று குழுமமாக அடையாளம் காணப்பட்ட சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் மூடல்

அதன் தொடர்ச்சியாக, இரண்டு நாள் அரசு முறை பயணமாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இன்று (13/09/2021) சிங்கப்பூர் வருகிறார். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் துணை பிரதமர் ஹெங் சுவீ கியெட் உள்ளிட்ட தலைவர்களை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து பேசவிருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, தென்கிழக்காசியாவில் நிலவும் பிரச்சனைகள், சர்வதேச விவகாரங்கள், பொருளாதாரம், மியான்மர் நாட்டில் நிலவும் சூழல், இறக்குமதி, ஏற்றுமதி, இரு நாடுகளிடையேயான விமான போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணையும் சந்திக்கும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இரு நாடுகளிடையேயான வெளியுறவுக் கொள்கைகள் குறித்தும் ஆலோசிக்கிறார்.

தஞ்சோங் பகார் விபத்து: சாலையில் கூடுதல் பாதுகாப்பு சேர்க்கப்படும் – LTA அறிவிப்பு.!

இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு வரும் செப்டம்பர் 14- ஆம் தேதி அன்று தென்கொரியாவுக்கு செல்லும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, பின்னர் சீனாவுக்கு திரும்புகிறார்.

அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த மாதம் சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.