சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

தென்கிழக்காசிய நாடுகளான வியட்நாம், கம்போடியாவில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நேற்று (13/09/2021) சிங்கப்பூர் வந்தார். அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை அவர் நேரில் சந்தித்துப் பேசினார்.

அதி நவீன வசதிகளுடன் திறக்கப்பட உள்ள ‘துவாஸ்’ துறைமுகம்!

அப்போது, சர்வதேச விவகாரம், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, கொரோனா பரவல், பொருளாதாரம், பிராந்தியங்களில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்டவைக் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.

இதனிடையே, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் உடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “பிஆர்சி மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயை ( PRC State Councilor and Foreign Minister Wang Yi) சிங்கப்பூருக்கு மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சி. தொடரும் பயணக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தோம். கடந்த ஆண்டு அக்டோபரில் சிங்கப்பூரில் அவரது பயணத்தின் போது நாங்கள் சந்தித்தோம். இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் முறையே புஜியான் மற்றும் சோங்கிங்கிற்கான எனது பயணங்களின் போது அவரை மீண்டும் சந்தித்தேன்.

மாநில கவுன்சிலர் வாங் யீ-யும், நானும் சிங்கப்பூர் மற்றும் சீனாவின் கணிசமான, நீண்டகால உறவை மீண்டும் உறுதிப்படுத்தினோம். எங்கள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் உயர்மட்ட தொடர்புகளைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து நாங்கள் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டோம்.

பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவருக்கு 24 வாரங்கள் சிறைத் தண்டனை!

பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டோம். கோவிட்-19ன் சவால்களிலிருந்து பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்கு சாதகமான உலகளாவிய சூழலை உருவாக்க, ஆசியான் மற்றும் சீனா உட்பட சர்வதேச ஒத்துழைப்பை ஆழப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நானும், வாங்-கும் விவாதித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று (14/09/2021) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் துணைப் பிரதமரை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, தென் கொரியா செல்லும் அமைச்சர் வாங் யீ, பின்னர் சீனா திரும்புகிறார்.