COVID-19: சிங்கப்பூரில் தயார் நிலையில் உள்ள சமூக பராமரிப்பு இடங்கள்.!

(photo: mothership)

சிங்கப்பூரில் அண்மையில் கொவிட்-19 அதிகரித்துவருவதால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி, தங்கவைத்து கவனித்துக்கொள்வதற்காக டிரிசார்ட் என்டியுசி, துவாஸ் சௌத், பிரைட் விஷன் ஆகிய மருத்துவமனைகள் சமூக பராமரிப்பு இடங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் கிட்டத்தட்ட 2,400 நோயாளிகளை தங்க வைக்க முடியும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்று உறுதிசெய்யப்பட்டு, தொற்றின் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், குறைந்த பட்ச அபாயம் உள்ளவர்கள் இங்கு தங்கவைக்கப்படுவார்கள்.

கடந்த நாட்களின் நிலவரப்படி, இதுவரை 268 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வருகிறார்கள். இது 10% வரை சமூக இடங்களின் கொள்ளளவை நிரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் காலத்தில் கொள்ளளவை அதிகரிக்க நேரிட்டால் முன்னாள் அங் மோ கியோ தொழில் நுட்ப கல்வி கழகம், லோயாங் அரசாங்க ஊழியர் மனமகிழ் மன்றம் ஆகிய இடங்கள் சமூக வசிப்பிடங்களாக மாற்றப்பட்டு, அதில் 1700 பேரை தங்கவைக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தேவைகளுக்கு ஏற்றவாறு வசிப்பிடங்கள் கொள்ளளவை கூட்டவோ, குறைக்கவோ ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.