மின்- சிகரெட்டுகள் சட்டவிரோதமாக இணையத்தில் விற்பனை- 13 பேருக்கு அபராதம்!

Photo: Health Sciences Authority

 

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகள் (e-vaporisers) மற்றும் அது சம்மந்தப்பட்டப் பொருட்களை (components) இணையதளம் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் 13 பேருக்கு 3,000 சிங்கப்பூர் டாலர் முதல் 53,500 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் (Health Sciences Authority- ‘HSA’) தெரிவித்துள்ளது.

குற்றம் புரிந்தவர்கள் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். இவ்வாண்டு மார்ச் முதல் ஜூன் வரை நடந்த வழக்கு விசாரணைகளில் அந்த 13 பேர் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகள் நிரூபணமாயின. இதனையடுத்து, நீதிபதி அந்த 13 பேருக்கும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மொத்த அபராத தொகை 1,64,500 சிங்கப்பூர் டாலர் ஆகும்.

கெய்லாங் பஹ்ருவில் உள்ள நடன ஸ்டுடியோவில் தீ விபத்து

13 பேரில், இருவருக்கு தனித்தனி குற்றங்களுக்காக, 33 மாதங்களும் 13 வாரங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் வெளிநாட்டு விநியோகிப்பாளர்களிடமிருந்து மின்-சிகரெட்டுகள் மற்றும் அது தொடர்பான பொருட்களை வாங்கி, உள்ளூர் சமூக ஊடகங்கள் (local social media), இ-காமர்ஸ் (e-commerce platforms) எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும், சுமார் 20,000 சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய மின்-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் மின்-சிகரெட்டுகளை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும், அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்; அத்தகைய தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

டெலிகிராம் குழு மூலம் ஆபாச காணொளி, புகைப்படங்கள் பரிமாற்றம் – 4 பேர் மீது குற்றச்சாட்டு

கடந்த 2018- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தாண்டு ஜூன் மாதம் வரை, மின் சிகரெட்டுகளை விற்பனை செய்ததற்காக சுகாதார அறிவியல் ஆணையம் 56 பேர் மீது வழக்குத் தொடர்ந்தது.

சிங்கப்பூரில் உள்ள துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசியாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை செய்து வருகின்றன. அப்போது, வாகனங்களில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்படும் பொருட்களைப் பறிமுதல் செய்து, வாகனங்களை ஓட்டிவந்த ஓட்டுநர் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, சிங்கப்பூர்- மலேசியா இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.