சிங்கப்பூரில் புனித ரமலான் மாதத்தில் நோன்பு துறப்பதற்காக தினமும் 20,000 பேருக்கு இலவச உணவு..!

Free food for 20,000 people daily
Free food for 20,000 people daily (Photo: Roses Of Peace)

சிங்கப்பூரில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் நோன்பு துறப்பதற்காக தினமும் 20,000 பேருக்கு உணவு வழங்க #எஸ்ஜியுனைடெட் புக்கா புவாசா திட்டம் முன்வந்துள்ளது.

இத்திட்டம் மூலம் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வசதி குறைந்தோருக்கும் இலவச உணவு வழங்கப்படும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 657 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

COVID-19 கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடும் முன்னிலை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களோடு ஒருமைப்பாடு காட்டவும் நன்றி கூறும் நோக்கத்திலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“மற்றவர்களின் நோன்பு துறப்புக்கு நன்கொடை வழங்குவது முஸ்லிம்களிடையே பாராட்டுக்குரிய ஒரு செயலாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ரமலான் மாதமும் நமது பள்ளிவாசல்களில் சமூக நோன்பு துறப்பை ஏற்பாடு செய்ய நன்கொடை அதிகம் வழங்கப்படும்,” என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) தலைமை நிர்வாகியான திரு ஈசா மசூத் தெரிவித்தார்.

இவ்வாண்டு ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன என்றும் நெருக்கடிநிலையில் அவதியுறுவோருக்கு உதவும் இந்த அர்த்தமுள்ள திட்டத்தில் ஈடுபடுவதாகவும் திரு ஈசா கூறினார்.

இத்திட்டத்தைப் பற்றி பிரதமர் லீ சியன் லூங், அதிபர் ஹலிமா யாக்கோப், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி போன்ற தலைவர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்திருந்தனர்.

“வேலை இழந்தவர்கள், குறிப்பாக குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள் உணவின்றி தவிக்கக்கூடும் என்ற கவலை எனக்கும் என் நண்பர்களுக்கும் உதித்தது. அப்போது ஏதாவது திட்டம் மூலம் மக்களுக்குச் சேவையளிக்கவேண்டும் என்று முனைந்தோம்.”

“இரண்டே நாட்களில் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நண்பர்கள், இதர அமைப்புகளின் உதவி பெருமளவு கிட்டியது,” என்று ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்பின் தலைவரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு முகம்மது இர்ஷாத் தெரிவித்தார்.

Source: Tamil Murasu

இதையும் படிங்க : COVID-19 தொற்றால் சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!