சிகரெட்டு துண்டை தூக்கி வீசியதால் ஏற்பட்ட தீ – இந்திய ஊழியருக்கு சிறை

(Photo: Mothership)

30 வயதுமிக்க இந்திய நாட்டவரான கணேசன் சண்முகம் என்ற ஊழியர், அங் மோ கியோ காவல்துறை பிரிவு தலைமையகத்தில் குளிர்பதனப் பெட்டிகளை பழுதுபார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, புகை பிடித்தது போக எஞ்சிய சிகரெட் துண்டை முழுமையாக அணைக்காமல் அங்குள்ள குப்பைத்தொட்டியில் வீசியுள்ளார். இதனால், அந்த குப்பையில் தீ மூண்டது, அதன் காரணமாக அங்கு S$5,300 மதிப்புக்கு மேல் சேதம் ஏற்பட்டது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக பெண் மரணம்.!

தம் கவனக்குறைவால் தான் தீ பற்றியது என்பதை ஒப்புக்கொண்ட கணேசனுக்கு, 10 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி 9ஆம் தேதி இரவு 11.45 மணியளவில் காவல்துறை தலைமையகத்தின் தரைத்தளத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வேளையில் வெளியில் மழை பெய்துகொண்டு இருந்ததால் மெயின் சுவிட்ச் அருகில் புகைபிடிக்க கணேசன் முடிவெடுத்துள்ளார் என்ற விளக்கத்தை அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர் சுனில் நாயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

அந்த பகுதியில் தீ மூண்டதை அடுத்து, 20 நிமிடம் கழித்து நபர் ஒருவர் கணேசனிடம் தெரிவிக்க இருவரும் ஒன்றாக அவ்விடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்டுள்ளனர்.

ஏதோ எரிவது போன்ற வாடையை உணர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அவ்விடத்திற்கு சென்று சுற்றி பார்த்துள்ளார், அவருடன் வேறு சில காவல்துறை அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.

அப்போது, அங்கு கணேசனும் அந்த நபரும் குப்பைகளை அப்புறப்படுத்திக்கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். பின்னர், நடந்தவை அனைத்தும் காவல்துறையினரிடத்தில் விவரிக்கப்பட்டது.

கணேசனுக்கு S$2,000 பிணை வழங்கப்பட்டுள்ளது. தண்டனையை பெற அவர் அரசு நீதிமன்றத்தில் நாளை முன்னிலைப்படுத்தப்படுவார்.

“தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுங்கள்; தாமதிக்க வேண்டாம்”- பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தல்!