வேலையிடத்தில் வீணான ஆசைகளை வளர்த்துக்கொண்ட இந்திய ஊழியர் – சிறையில் தள்ளிய ஆசை

indian worker jailed stalking woman work
Singapore

சிங்கப்பூரில் 27 வயதான பெண் ஒருவர் மீது காதல் உணர்வுகளை வளர்த்துக்கொண்டு அவரை பின்தொடர்ந்த இந்திய ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்துள்ளனர். வேலை முடிந்து வெளியே வரும் பெண்ணுக்காக காத்திருந்த அவர், பல சந்தர்ப்பங்களில் பெண்ணை பின்தொடர்ந்தும் சென்றார் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் சந்தித்த துயரம்.. கதறி அழும் பரிதாபம் – உஷாரா இருங்க

இந்நிலையில், இந்திய நாட்டை சேர்ந்த மணி (29) என்பவருக்கு மூன்று மாதங்கள் மற்றும் ஒரு வாரம் சிறைத்தண்டனை நேற்று திங்கள்கிழமை (ஜன. 22) விதிக்கப்பட்டது.

பின்தொடர்ந்த மூன்று குற்றச்சாட்டுகளையும், ஒரு திருட்டு குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

தண்டனையின்போது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

என்ன நடந்தது?

உணவகம் ஒன்றில் அவர்கள் ஒன்றாகப் பணியாற்றியதாக கூறப்பட்டுள்ளது.

மணி அங்கு மூன்று மாதங்கள் மட்டுமே பணிபுரிந்தார் என்றும், அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் அந்த நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

2022 டிசம்பர் மாத பிற்பகுதியில், வேலையை முடித்துவிட்டு அந்த பெண் வீட்டிற்குத் திரும்ப கிராப் காரை முன்பதிவு செய்தார். அப்போது அதில் மணிக்கும் லிப்ட் கொடுக்க சம்மதித்துள்ளார்.

அந்த பயணத்தின் போது மணி பெண்ணின் கைப்பேசி எண்ணைக் கேட்டுள்ளார். மேலும் தன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

தன்னுடன் வேலைபார்க்கும் சக ஊழியர் என்ற நோக்கத்துடன் மட்டுமே, அந்த இரண்டையும் பெண் செய்தார்.

பின்னர் தன் உள்ளத்தில் காதலை வளர்த்துக்கொண்ட மணி, “நீங்கள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது” என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

பெண்ணுக்கு அதுபோன்ற காதல் எண்ணம் ஏதும் இல்லாததால் மணியை அலட்சியப்படுத்தி, அவரது கைப்பேசி எண்ணை முடக்கியுள்ளார். இருப்பினும், பெண்ணை விடாமல் பின்தொடரத் தொடங்கினார் மணி.

அதோடு மட்டுமல்லாமல், அவர் பெண்ணின் ஜாக்கெட்டைத் திருடியது விசாரணையில் தெரியவந்தது.

2023 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி, பெண்ணின் வீட்டின் வெளியே தொங்கிக்கொண்டிருந்த ஜாக்கெட்டை அவர் திருடியுள்ளார்.

இதனை அடுத்து, மணி ஜூலை 22, 2023 அன்று கைது செய்யப்பட்டு மறுநாள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பிணையில் இருந்தபோதும், மணி அந்த பெண்ணை பின்தொடர்வதை கைவிடவில்லை.

2023 அக்டோபர் 25 அன்று, பெண்ணின் வீட்டுக்கு கடிதம் அனுப்ப உதவுமாறு நண்பரிடம் கேட்டுள்ளார் மணி.

பின்னர் பெண்ணின் வீட்டுக்கு சென்ற நண்பர், பெண்ணின் தாயிடம் அந்த கடிதத்தை கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து, 2023 டிச., 22ல், ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசுத் தரப்பு விண்ணப்பித்ததையடுத்து, மணி ரிமாண்ட் செய்யப்பட்டார்.

மேலும், தனது தவறுக்கு நீதிமன்றத்தின் மன்னிப்பைக் கேட்ட மணி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் காவல்துறையிடம் சொன்னதாக கூறினார்.

பின்தொடர்ந்த ஒவ்வொரு குற்றத்திற்கும், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

 

சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் சந்தித்த துயரம்.. கதறி அழும் பரிதாபம் – உஷாரா இருங்க