COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு செய்யக்கூடாதவை என்னென்ன?

(Photo: Ministry of Health)

கோவிட் -19 தடுப்பூசிக்கான சுகாதார அமைச்சக குழு திங்களன்று (ஜூலை 5) கோவிட் -19 தடுப்பூசியின் முதல் அல்லது இரண்டாவது டோஸை பெற்ற பின்னர் ஒரு வாரத்திற்கு கடுமையான பயிற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம் என அறிவித்தது.

இந்த அறிவிப்பானது ஜூன் 11 அன்று வழங்கப்பட்ட ஆலோசனையிலிருந்து மேலும் திருத்தும் செய்யப்பட்டதாகும். அதன்படி தடுப்பூசி போட்ட நபர்களுக்கு அவர்களின் இரண்டாவது டோஸுக்குப் பிறகு கடுமையான பயிற்சிகளை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதயதசை மற்றும்
இதயஉறை வீக்கம் ஏற்பட்ட பின்னரே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது.

உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் காணப்பட்ட தடுப்பூசி தொடர்பான இதயதசை ஒவ்வாமை ஏற்பட்டுள்ள பெரும்பாலான நபர்கள் லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். சரிவர குணமடையாத நிலையில் இதயத்தை பாதிக்கும் காரணிகள் அல்லது கடுமையான பயிற்சிகளால் நிலைமை மோசமடையக்கூடும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இந்த ஆலோசனை அனைவருக்கும் வழங்கப்பட்டாலும் இளம் பருவத்தினர் மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், குறிப்பாக தடுப்பூசிக்குப் பிறகு கடுமையான பயிற்சிகளை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம், பளு தூக்குதல், போட்டி விளையாட்டு மற்றும் பந்து விளையாட்டுகள் போன்றவையே கடுமையான பயிற்சிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்.

ஃபைசர்-பயோஎன்டெக் / கொமிர்னாட்டி தடுப்பூசியின் முதல் டோஸை தொடர்ந்து பளுதூக்குதல் மேற்கொண்ட பின்னர் 16 வயது இளைஞர் இருதயக் கோளாறுக்கு ஆளானார் என்ற சமீபத்திய அறிவிப்பிலிருந்து இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கு கோவிட் -19 தடுப்பூசி தான் காரணமா என்பதை தீர்மானிக்க சுகாதாரத்துறை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறது. இளம் வயதில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணிகள் குறித்தும் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 5ம் தேதி மற்றொரு அறிவிப்பில் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பின்னர் 12 தனிநபர்களுக்கு இதயத்தசை மற்றும் இதயவுறை ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகக் அறிவித்தனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது அசாதாரண இதயத் துடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும் எனவும் இது போல அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.