தேசிய தினத்தன்று புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிவப்பு ஆப்பிள்களை வழங்கிய தன்னார்வலர்கள்!

Photo: CMSC Official Facebook Page

 

சிங்கப்பூரின் 56- வது தேசிய தினம் (National Day Of Singapore) நேற்று (09/08/2021) மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டிலேயே மகிழ்ச்சியுடன் தேசிய தினத்தைக் கொண்டாடினர்.

இந்த நிலையில், கோவிட் -19 புலம் பெயர்ந்தோர் ஆதரவு கூட்டணி (WeFruits Campaign by Volunteer Group) என்ற தன்னார்வக் குழுவின் ‘WeFruits’ பிரச்சாரத்தின் (Covid-19 Migrant Support Coalition- ‘CMSC’) ஒரு பகுதியாக, தேசிய தினத்தையொட்டி நேற்று (09/08/2021) சிங்கப்பூரில் உள்ள 30- க்கும் மேற்பட்ட தங்குமிடங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு (Migrant workers) சுமார் 10,000 சிவப்பு ஆப்பிள்கள் வழங்கி ஆதரவு தெரிவித்தது. ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா இரண்டு ஆப்பிள்கள் வழங்கப்பட்டது. அத்துடன் சத்துணவுப் பழக்கத்தைக் கடைபிடிக்கும் வழிமுறைகள் அடங்கிய அஞ்சல் அட்டையில் எழுதப்பட்டிருந்த குறிப்பும் (Postcards in English with Nutrition Tips) அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த குறிப்பை செங்காங் கிரீன் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த (Sengkang Green Primary School) 200- க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.

“வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும்”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு நேரில் சென்று ஆப்பிள் வழங்கும் பணியில் சுமார் 50- க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். பொதுமக்கள் அளித்த நன்கொடை மூலம் இந்த சிவப்பு ஆப்பிள்கள் வாங்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றன தன்னார்வலர்கள்.

கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இறைச்சி, காய்கறிகள், பழங்கள் இல்லாமல் அரிசி சாப்பாட்டை மட்டும் அதிகளவு சாப்பிட்டதை ‘CMSC’ தன்னார்வலர் குழுவினர் கவனித்ததைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் உடல்நலனைப் பேணுவதில் ஆதரவளிக்க முடிவெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தற்போது சிவப்பு ஆப்பிள் பழங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் இணை நிறுவனர் மற்றும் இணைத் தலைவரான ரெனிடா சோஃபியா கிரஸ்டா (வயது 38) (Co-founder and co-lead of the group Renita Sophia Crasta) கூறுகையில், “இந்த தேசிய தினத்தின் கருப்பொருள் வலுவாக உருவெடுத்திருக்கிறது. நமது சமூகத்தில் தாங்களும் ஓர் அங்கம் என்றும் தாங்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுவதாகவும் வெளிநாட்டு தொழிலாளர்களைக் கருதச் செய்யும் முயற்சி இது. அவர்களின் ஆரோக்கியத்தை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் உற்சாகத்தை உயர்த்தவும் விரும்புகிறோம்” என்று கூறினார்.

சிங்கப்பூர் தேசிய தினம்- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வாழ்த்து!

புலம் பெயர்ந்த தொழிலாளரான வங்கதேசத்தைச் சேர்ந்த கான் ஜாகிர் ஹுசைன் (வயது 36) (Bangladeshi Khan Jakir Hossain) துவாஸில் உள்ள தங்குமிடத்தில் கடந்த 15 மாதங்களாக வசித்து வருகிறார். இவர் கூறுகையில், “தனது விடுதியில் உள்ள பொழுதுப்போக்கு மையத்தைத் தவிர வேறு எங்கும் செல்ல முடியவில்லை. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், ஏனென்றால் நாங்கள் எதையும் வாங்க வெளியே செல்ல முடியாது. நாங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தாலும், அது கடினம். எனவே, மக்கள் எங்களுக்கு ஏதாவது நன்கொடை அளிக்கும்போது, ​​நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் நிறைய உதவிகளைப் பெற்றுள்ளோம், அதை மிகவும் பாராட்டுகிறோம்” எனத் தெரிவித்தார்.