நேபாள விமான விபத்து- 68 சடலங்கள் மீட்பு!

Twitter Image

நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களுக்காக இன்று (16/01/2023) நேபாள அரசு ஒருநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கிறது.

“பொங்கலோ பொங்கல்!” என்று தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் திரு. லீ!

நேபாளத்தில் யெட்டி என்ற விமான நிறுவனத்தைச் சேர்ந்த (Yeti Airlines) பயணிகள் விமானம் தலைநகர் காத்மண்டுவில் இருந்து போகாரா என்ற நகருக்கு சென்றுக் கொண்டிருந்தது. தரையிறங்குவதற்கு 1.5 கி.மீ. தூரம் இருந்த போது, செய்தியாற்றின் பள்ளத்தாக்கில் விமானம் திடீரென தலைக்குப்புற கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. தரையில் மோதியதால் விமானம் பலத் துண்டுகளாக உடைந்து, தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது.

விமானத்தில் 15 வெளிநாட்டினர் உள்பட 68 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்தனர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துச் சென்ற 200- க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர், தீயில் கருகிக் கிடந்த சடலங்களை மீட்டனர்.

விபத்தில் சிக்கியவர்களில் ஐந்து இந்தியர்களும் அடங்குவர். இதுவரை 68 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாகல் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஒரு நாள் அரசுமுறைத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.

பாரம்பரிய பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து பொங்கலைக் கொண்டாடிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

இந்தியாவும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க ஐந்து நபர் குழுவை நேபாள அரசு அமைத்துள்ளது. சீன நாட்டு நிதியுதவியுடன் அன்னப்பூர்ணா மலைத்தொடரில் உள்ள போகாரா விமான நிலையம், இந்தாண்டு ஜனவரி 1- ஆம் தேதி தான் விமான போக்குவரத்துக்கு அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் வெப்பநிலை மாற்றம், மலைப் பகுதி ஓடுப்பாதைகள் என பல்வேறு காரணங்களால் நேபாளத்தில் விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. கடந்த 2022- ஆம் ஆண்டு மஸ்தான் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலியாகின. கடந்த 2018- ஆம் ஆண்டு காத்மண்டு அருகே ஏற்பட்ட விபத்தில் 51 பேரும், கடந்த 2016- ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் 23 பேரும் பலியாகின.