‘அஞ்சல் சேவையில் மின்சார வாகனங்கள்’- சிங்கப்பூர் அஞ்சல் துறை அதிரடி முடிவு!

Photo: Singapore Post

 

உலகில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சிங்கப்பூர், சீனா, ஜப்பான், போன்ற உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக, மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹூண்டாய் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பசுமையான சிங்கப்பூரை உருவாக்கும் வகையில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், மின்சார வாகனங்களை உற்பத்திச் செய்யும் நிறுவனகளுக்கும், அதனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் அரசு சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாக, நடப்பு நிதியாண்டில் மின்சார கார்களை வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் மிக அதிக மின்சார கார்கள் விற்பனையாகியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கட்டுமான ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள்.!

அதேபோல், துப்புரவு பணிகளிலும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய கனரக வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும், சிங்கப்பூரில் பெருமபாலான இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சார்ஜிங் மையங்களை அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களும் மின்சார வாகனங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் கூறுகின்றன.

அந்த வகையில், சிங்கப்பூர் அஞ்சல் துறையில் (Singapore Post) உள்ள அஞ்சலை விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக 2026- ஆம் ஆண்டுக்குள் மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், மின்சாரத்தில் இயங்கக் கூடிய இரண்டு மின்சார ஸ்கூட்டர்களையும், இரண்டு வேன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது சிங்கப்பூர் அஞ்சல்துறை. இவை இன்று (16/08/2021) முதல் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

தபால்காரர் விரைவில் உங்கள் அஞ்சலை மின்சார வாகனங்களில் கொண்டு வருவார்கள் என்று சிங்கப்பூர் அஞ்சல்துறை குறிப்பிட்டுள்ளது. 800- க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர ஸ்கூட்டர்கள், வேன்கள் ஆகியவை அடுத்த ஐந்தாண்டுகளில் மின்சார வாகனங்களாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டத்திற்கு புறம்பாக முகக்கவசங்களை பெற்றதாக 5 பேர் மீது குற்றச்சாட்டு

மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கு அவ்வப்போது சார்ஜிங் செய்தால் போதும். வாகனத்தை முழுமையாக சார்ஜிங் செய்தால், சுமார் 120 கிலோமீட்டர் தூரத்துக்குப் பயணம் செய்ய முடியும்.

இது குறித்து தகவல் தொடர்பு மற்றும் தகவல் மற்றும் தேசிய மேம்பாட்டுத் துறை அமைச்சர் டான் கியாட் (Minister of State for Communications and Information and National Development Tan Kiat) கூறுகையில், “மக்கள் மற்றும் வணிகங்களின் வளர்ந்து வரும் அஞ்சல் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் சிங்கப்பூர் அஞ்சல் துறையின் அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு சிங்கப்பூர் அஞ்சல் துறையின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தும்” என்றார்.

“மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதால், அவை எதிர்காலமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், வாகனங்களை சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சிங்கப்பூரின் முக்கிய போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி (SMRT) தனது அனைத்து டாக்ஸிகளையும் ஐந்து ஆண்டுகளுக்குள் மின்சார டாக்ஸிகளாக மாற்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.