சிங்கப்பூரில் SIM கார்டுகளுக்கு புதிய சட்டம்.. கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

சிங்கப்பூரில் SIM கார்டுகளுக்கு
MCI and Brett Jordan/Unsplash

சிங்கப்பூரில் SIM கார்டுகளுக்கு புதிய சட்டம் ஒன்று நேற்று (ஏப்ரல் 2) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்த புதிய சட்டத்தின் கீழ், உள்ளூர் சிம் கார்டுகளை குற்றச் செயல்களுக்காக மற்றொருவருக்கு கொடுப்பவர்களும் இனி குற்றவாளி தான்.

சிங்கப்பூரில் சிம் கார்டு தொடர்பான முறைகேடுகளை சரிக்கட்ட, உள்துறை விவகாரங்களுக்கான இரண்டாவது அமைச்சர் ஜோசபின் தியோ புதிய சட்டத்தின் விவரங்களைத் தெரிவித்தார்.

உள்ளூர் கைப்பேசி எண்களை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எண்களிலிருந்து மோசடி அழைப்புகள், WhatsApp மற்றும் டெலிகிராம் கணக்குகள் வழியாக மோசடி நடப்பதாகவும், மேலும் PayNow மூலம் பணத்தைப் பெறுவதற்கும் உள்ளூர் எண்கள் பயன்படுவதாகவும் அமைச்சர் தியோ கூறினார்.

புதிய சட்டத்தின் கீழ்…

பொறுப்பற்ற முறையில் உள்ளூர் சிம் கார்டுகளை வாங்குபவர்கள் இனி குற்றவாளி.

மற்றவர்களுக்காக வேண்டி தன் சொந்த விவரங்களை கொடுத்து சிம் கார்டு வாங்கி தருவதும் குற்றம்.

குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்த வேண்டி சட்டபூர்வமாக சிம் கார்டு வாங்குபவர்கள் இந்த சட்டத்தின்கீழ் வரமாட்டார்கள்.

பணம் பெற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு சிம் கார்டு வாங்கிக்கொடுத்து இருந்து, அதை அவர் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தினால் நாமும் இதில் குற்றவாளி என இந்த சட்டம் சொல்கிறது.

சிம் கார்டை அவர் குற்றச்செயலுக்காக பயன்படுத்துவார் என எனக்கு தெரியாது என கூறி இனி தப்பிக்க இயலாது.

பொறுப்பற்ற முறையில் சிம் கார்டுகளை பதிவு செய்யும் நபர்கள், அதை பெறுபவர்கள், விநியோகம் செய்யும் நபர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் கடைக்காரர்கள் என அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அந்த சட்டம் வழிவகை செய்கிறது.

தண்டனை

முதல் குற்றத்திற்கு S$10,000 வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இரண்டாவது அல்லது அடுத்தடுத்த குற்றங்களுக்கு S$20,000 வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

சிங்கப்பூர் கோவிலில் திருட்டு சம்பவம்.. ஊழியர் மீது எழுந்த குற்றச்சாட்டு