தீபாவளி திருநாளையொட்டி வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருந்து!

Photo: Chye Joo Construction Pte Ltd

கொரோனா நோய் தொற்றின் நெருக்கடியால், தனது சொந்த பந்தங்களை விட்டுப் பிரிந்து, ஏறத்தாழ இரண்டு வருடங்களாக வெளியே கூடச் செல்ல முடியாமல் கவலையுடன் தவித்துக் கொண்டிருக்கின்றனர் தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

இவ்வூழியர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாகவும், ஆறுதல் அளிப்பதற்காகவும், தீபாவளி திருநாளையொட்டி, உணவு மற்றும் இந்திய பாரம்பரிய இனிப்புப் பலகாரங்களை வழங்கி அனைவரின் உள்ளத்திலும் சந்தோஷத்தை கொண்டு வர முயன்றுள்ளனர் ஞானானந்தம் மிஷன் அமைப்பை சார்ந்தவர்கள்.

சிங்கப்பூரில் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

சை ஜூ கன்ஸ்ட்ரக்சன்ஸ் எனும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுமார் 100 வெளிநாட்டு ஊழியர்களுக்கு, அவ்வூழியர்கள் வேலை பார்க்கும் பகுதியான மரினா சவுத் வட்டாரத்தில் உள்ள கட்டுமானத் தளத்திலேயே மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக நிர்வாக இயக்குனரான பூஜ்யஸ்ரீ நிரஞ்சனானந்த கிரி சுவாமி தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மதிய உணவிற்காக வெஜ்டபுள் பிரியாணி மற்றும் இந்திய பாரம்பரிய இனிப்புப் பலகாரங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது குடும்பங்களையும், நண்பர்களையும் பிரிந்து வாடும் வெளிநாட்டு ஊழியர்களின் மனதில் நிறைவையும், முகத்தில் புன்னகையையும் கொண்டு வர எங்களால் ஆன சிறிய முயற்சி என்றனர் அந்த அமைப்பினர்.

வரும் காலங்களில் இதுபோன்று மேலும் பல முயற்சிகள் செய்து இன்னும் பல மக்களுடன் எங்களுடைய அன்பைப் பரிமாறிக் கொள்ள விரும்புகிறோம் என்று அவ்வமைப்பில் உள்ளூர் நிர்வாக இயக்குநரும், மின் பொறியியல் நிபுணருமான டாக்டர் கஜன் (வயது 41) தெரிவித்தார்.

ஞானானந்தம் மிஷன் சிங்கப்பூர் கிளை மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் (MWC) ஒன்றிணைந்து பல நண்பர்களுடன் இந்த உணவு வழங்கும் முயற்சி மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃ தொருவன்
பெற்றான் பொருள்வைப் பழி.

என்ற திருவள்ளுவரின் திருக்குறளை மெய்யாக்கும் வகையில் ஞானானந்தம் மிஷன் அமைப்பின் இச்செயல் இருந்தது.

மேலும் இவ்வாறு சிரமத்திலும், கஷ்டத்திலும் வாடும் மக்களின் மனதில் மகிழ்ச்சியை கொண்டு வருவதே எங்கள் அமைப்பின் குறிக்கோள் என்றும் அவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் பெருமையுடன் எடுத்துரைத்தனர்.

சிங்கப்பூரில் அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது சுகாதாரத்துறை அமைச்சகம்!