ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்ற சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

அமெரிக்க நாட்டின் முக்கிய நகரமும், உலகின் வர்த்தக தலைநகரமுமான நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது பேரவைக் கூட்டம் நேற்று (21/09/2021) தொடங்கியது. செப்டம்பர் 27- ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டத்தில் 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டம் காலை, மதியம் என இரு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய நேரப்பபடி காலை 09.00 AM மணி முதல் மதியம் 2.45 PM மணி வரையும், பிற்பகல் 03.00 PM மணி முதல் 09.00 PM மணி வரை நடைபெற்று வருகிறது.

பொய்யான தகவல்கள் மூலம் “Work Pass” அனுமதி பெற முயற்சி – 18 பேர் கைது

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் நியூயார்க்- க்கு வரத் தொடங்கியுள்ளனர். அதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் நியூயார்க் சென்றுள்ளனர்.

அந்த வகையில், சிங்கப்பூர் அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று (21/09/2021) சிங்கப்பூரில் இருந்து தனி விமானம் மூலம் வாஷிங்டன் சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கும் அமைச்சர், அங்கு உரையாற்ற இருப்பதாக தகவல் கூறுகின்றன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரையும் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்து பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசி பணிகள், பொருளாதாரம், வர்த்தகம், தென்கிழக்காசியாவில் நிலவும் சூழல் உள்ளிட்டவைக் குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்சிலிங் லேன் ஈரச்சந்தை மற்றும் ஹாக்கர் மையம் தற்காலிமாக மூடல்.!

பின்னர், ஐந்து நாள் அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் செப்டம்பர் 25- ஆம் தேதி அன்று அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூர் திரும்புகிறார்.

உலக நாடுகளின் தலைவர்கள் வருகையால் நியூயார்க் நகரம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.