“சிங்கப்பூர், மதுரை இடையேயான விமான சேவை”- இந்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Photo: Air India Express Official Twitter Page

 

டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர் மற்றும் மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிங்கப்பூர் கல்வி அமைச்சரைச் சந்தித்த இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

அந்த கடிதத்தில், சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் பேர் கணிசமான அளவில் வசித்து வருவதாகவும், அவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில் முக்கியமாக தென் தமிழ்நாட்டில் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பலர் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்கின்றனர் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூருக்கும், சென்னைக்கும், திருச்சிக்கும் இடையே தினசரி விமான சேவையும், சிங்கப்பூருக்கும், கோயம்புத்தூருக்கும் இடையே தினசரி ஒரு விமானமும் இயக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சிங்கப்பூருக்கும், மதுரைக்கும் இடையே வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே விமானச் சேவை உள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூருக்கும், மதுரைக்கும் இடையே அதிக விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற பிரச்சனையை சிங்கப்பூர் அரசின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம் தன்னைச் சந்தித்த போது எழுப்பியதாகவும், இதே போன்ற கோரிக்கையை சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் தமிழக மக்கள் பலரும் முன் வைத்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டு, சிங்கப்பூருக்கும், மதுரைக்கும் இடையில் அதிக விமானங்களை இயக்கிட அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சாதகமாகப் பரிசீலித்திட இந்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்….. பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது இந்து அறக்கட்டளை வாரியம்!

டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான இணைப்பை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் மற்றும் சிங்கப்பூர் மற்றும் மதுரை இடையே விமானங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் ஒரு தினசரி விமானமாக அதிகரிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை தான் மீண்டும் வலியுறுத்துவதாகவும், இவற்றை முன்னுரிமை அடிப்படையில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பரிசீலித்திட வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.