‘இணையப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத் திட்டங்களில் அமெரிக்காவும், சிங்கப்பூரும் இணைந்துப் பணியாற்றும்’!

Photo: PM Office's Singapore

 

அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்று நாள் அரசு முறை பயணமாக, கடந்த ஆகஸ்ட் 22- ஆம் தேதி சிங்கப்பூர் வந்தார். அவரை சிங்கப்பூர் வெளியுறைவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அமெரிக்க துணை அதிபருடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்டோர் அவருடன் சிங்கப்பூர் வந்துள்ளன.

அதைத் தொடர்ந்து, நேற்று (23/08/2021) காலை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர், இஸ்தானாவிற்கு சென்ற அமெரிக்க துணை அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை நேரில் சந்தித்த அவர், இரு நாடுகளிடையேயான உறவுகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள், பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசித்தனர்.

தடுப்பூசிப் போடாத 86 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

அதன் தொடர்ச்சியாக, இரு தலைவர்களும் இஸ்தானாவில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சிங்கப்பூரும், அமெரிக்காவும் பருவநிலை மாற்றத் திட்டங்கள் மற்றும் இணையப் பாதுகாப்பில் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்தனர். நிலையான வளர்ச்சி காணவும், குறைவான கரியமில வாயு வெளியீடு கொண்ட தீர்வுகளில் கவனம் செலுத்தவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்படவிருக்கின்றன.

சிங்கப்பூர் அரசு, ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கு, அமெரிக்காவுக்கு உதவி வழங்கவிருக்கிறது. அந்த வகையில், சிங்கப்பூர் விமானப்படைக்கு சொந்தமான ‘A330 MRTT’ ரக எண்ணெய் நிரப்பும் போர் விமானத்தையும், வீரர்களுக்கான பயண விமானத்தையும் பயன்படுத்திக்கொள்ளும்படி அமெரிக்காவிடம் கூறியுள்ளது இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக மாறாது என்று நம்புவதாகக் கூறினார்.

“கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது முக்கியம்”- சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங்!

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பங்காளித்துவம் வர்த்தகங்களுக்கும், ஊழியர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று (24/08/2021) அமெரிக்க துணை அதிபர், சாங்கி விமானப் படைத் தளத்துக்கு சென்றுப் பார்வையிட்டார். சிங்கப்பூர் கடற்படையில் அண்மையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நவீனப் போர்க்கப்பல் செயல்படும் விதத்தையும் அவர் பார்வையிட்டார்.

மூன்று நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இன்று (24/08/2021) வியட்நாம் நாட்டிற்கு செல்கிறார்.