இந்தோனேசியாவிற்கு ‘AstraZeneca’ கொரோனா தடுப்பூசி மருந்தை அனுப்பிய சிங்கப்பூர்!

Photo: Ministry Of Health In Singapore

சிங்கப்பூர் அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்கள், கொரோனா தடுப்பூசி மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகளை கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் அனுப்பி வருகின்றன.

அந்த வகையில், இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள், திரவ ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர்கள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை சிங்கப்பூர் அரசு தொடர்ந்து அனுப்பி அந்நாட்டு மக்களுக்கு உதவி வந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று (28/09/2021) 1,22,400 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தோனேசியாவிற்கு சிங்கப்பூர் அரசு அனுப்பியுள்ளது.

சிங்கப்பூருக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே விமான சேவை எப்போது தொடங்கும்?- அறிவிப்பை வெளியிட்டது ‘Jetstar Asia’!

இதனை ஜூரோங் துறைமுகத்தில் இரண்டாவது வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், சிங்கப்பூருக்கான இந்தோனேசிய தூதர் சூர்யோ பிரதோமோவிடம் (Ambassador of the Republic of Indonesia to Singapore Suryo Pratomo) வழங்கினார். அந்த தடுப்பூசி மருந்துகள் கப்பல் மூலம் இந்தோனேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி மருந்துகள் பாத்தாம் (Batam), ரியாவ் (Riau Islands) ஆகிய தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு போடப்படவுள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் ஒருபகுதி இதுவென்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்தோனேசியாவில் 18%- க்கும் குறைவானவர்களே கொரோனா தடுப்பூசியின் முழுமையான, இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மருந்து அனுப்பப்பட்டுள்ளதால், தடுப்பூசி போடும் பணி இந்தோனேசியாவில் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்துக்கு கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பியுள்ள சிங்கப்பூர்!

நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் மருத்துவ உபகரணங்கள், திரவ ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர்கள் உள்ளிட்டவையை சிங்கப்பூர் அரசு ஏற்கனவே அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.