ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…. தமிழக பிரபலங்கள் பங்கேற்கும் கலை ஆராதனை!

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்.... தமிழக பிரபலங்கள் பங்கேற்கும் கலை ஆராதனை!
Photo: Sri Thendayuthapani Temple

 

 

சிங்கப்பூரில் டேங்க் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில். இந்த கோயிலில் புனரமைப்பு அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் ஜூன் 1- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் மே 27- ஆம் தேதி சனிக்கிழமை மாலை தொடங்கியுள்ளது.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் முன்னாள் அர்ச்சகர்க்கு 6 ஆண்டுகள் சிறை

இந்த நாளில் மட்டும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துள்ளது கோயில் நிர்வாகம். மஹா கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. இதற்காக கூடாரம் அமைக்கப்பட்டு, 1,000 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளது இந்து அறக்கட்டளை வாரியம்.

மேலும், பக்தர்களுக்கு உதவுவதற்காக தொண்டூழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் வீட்டில் இருந்த படியே கும்பாபிஷேக நிகழ்வுகளை காணும் வகையில், சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

அதைத் தொடர்ந்து, இந்த கோயிலில் ஜூன் 2- ஆம் தேதி முதல் ஜூலை 17- ஆம் தேதி வரை மண்டலாபிஷேகப் பூஜை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் நாள்தோறும் மாலை கலை ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, கோயிலுக்கு அருகே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் வரும் ஜூன் 2- ஆம் தேதி முதல் ஜூலை 15- ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 07.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை பக்தர்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம்.

சிங்கப்பூர் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- ஆலோசித்தது என்ன?

இந்த நிகழ்ச்சிகளில், தமிழக பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில், இஞ்சிக்குடி கலைமாமணி அகில உலக நாதஸ்வர சக்கரவர்த்தி E.M.சுப்ரமணியன், பதம ஸ்ரீ, கலைமாமணி, இசைப் பேராசிரியர் சீர்காழி கோ.சிவசிதம்பரம், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மகன் எஸ்.பி.சரண், ‘ஹரிவராசனம் விருது’ பெற்ற ‘கலைமாமணி’ வீரமணி ராஜு, பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://sttemple.com/ என்ற ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலின் இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.