சிங்கப்பூர் வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

 

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அழைப்பை ஏற்று மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் வந்தடைந்தார். இன்று (22/08/2021) காலை 10.30 AM மணியளவில் பயா லெபார் விமான தளத்தில் (Paya Lebar Air Base) அமெரிக்க துணை அதிபரின் விமானம் தரையிறங்கியது. அங்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை வரவேற்றார்.

துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், பாதுகாப்புத்துறைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

தாக்க வந்த தீவிரவாதிகள்.. பணயக் கைதியான மாஜி அதிபர் எஸ்.ஆர்.நாதன்.. சிங்கப்பூரின் திக் திக் நிமிடங்கள்!

அதைத் தொடர்ந்து, நாளை (23/08/2021) பிரதமர் லீ சியன் லூங், அதிபர் ஹலிமா யாக்கோப் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, கொரோனா தடுப்புப் பணிகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், அமெரிக்கா- சிங்கப்பூர் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது, பொருளாதாரம், வர்த்தகம், ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அவர் பிரதமர் லீயுடன் கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார்.

அதேபோல், துணை அதிபர் கமலா ஹாரிஸ் சாங்கி கடற்படைத் தளத்துக்குச் சென்று அங்குள்ள அமெரிக்கப் போர்க்கப்பலைப் பார்வையிடுவார். மேலும், வர்த்தகத்துறையினர் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் சிங்கப்பூர் தொழில், வர்த்தகத் துறை அமைச்சரும் கான் கிம் யோங்கும் கலந்து கொள்கிறார். இதில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ், மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, ஆகஸ்ட் 24- ஆம் தேதி அன்று வியட்நாம் செல்கிறார். வியட்நாம் செல்லும் முதல் அமெரிக்க துணை அதிபர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

கோலாகலக் கொண்டாட்டங்களுடன் நிறைவடைந்த 56- வது தேசிய தின அணி வகுப்பு!

இதனிடையே, அமெரிக்க துணை அதிபரின் வருகையையொட்டி, சிங்கப்பூர் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்றப் பின், இரண்டாவது அரசு முறை பயணமாக சிங்கப்பூருக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.