முதல் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், வியட்நாமிற்கு வருகை தரவுள்ள அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்!

Photo: US Vice President Kamala Harris Official Twitter Page

அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் (US Vice President Kamala Harris) அடுத்த மாதம் (ஆகஸ்ட்) தனது முதல் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் (Singapore and Vietnam) ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெள்ளை மாளிகை (White House) நேற்று (30/07/2021) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பின் பேரில் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் வருகை தரவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிங்கப்பூர் என்ன விலை?” – பேரம் பேசிய வெள்ளைக்காரர்… கையெழுத்தான ஒப்பந்தம்! | சிங்கப்பூர் சிலிர்த்தெழுந்த வரலாறு

பிரதமர் லீயின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “துணை அதிபர் கமலா ஹாரிஸின் வருகை இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். சிங்கப்பூர் தலைவர்களைச் சந்திக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ், பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் வர்த்தகம், காலநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று, இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்”. இவ்வாறு அவர் கூறினார்.

“சிங்கப்பூருக்கு தனது முதல் அரசு முறைப் பயணமாக வருகை தரும் துணை அதிபர் கமலா ஹாரிஸை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

அதேபோல், வியட்நாம் நாட்டிற்கு செல்லும் அமெரிக்காவின் முதல் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுகிறார்.

கொரோனா பாதிப்பு: பிரபல Home’s Favourite பேக்கரி ஆகஸ்ட் 12 வரை மூடல்.!

அமெரிக்க துணை அதிபரின் சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய இரு நாடுகளின் அரசு முறை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பயணத்தின் போது பல்வேறு துறைச் சார்ந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.