சிங்கப்பூரில் அரங்கேறி வரும் தடுப்பூசி தொடர்பான மோசடிகள்; விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்.!

கொரோனா தொற்று பரவல், தடுப்பூசி போட ஏற்பாடுகள் என ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சீனாவில் உள்ள அதிகாரிகள் போல பேசி உள்ளூர் மக்கள் தவறு இழைத்துள்ளதாகவும், அதற்காக விசாரணை மேற்கொள்வது போல பணம் பறிப்பது போன்ற ஆள்மாறாட்ட மோசடி சம்மந்தப்பட்ட புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

அதே போன்ற மோசடி ஒன்று தற்போது பரவலாக நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அண்மையில் தடுப்பூசி போடபட்டு வருவதால், அதை ஒரு துருப்பாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

தாங்கள் சுகாதார அமைச்சக அதிகாரிகள் போன்று தொடர்பு கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொண்டு தருவதாக கோரி அவர்கள் மோசடியில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. இந்த மோசடியை அண்மையில் சந்தித்த ஒருவர் இது குறித்து தேசிய குற்ற தடுப்பு மன்றம் நிறுவகித்துவரும் அரசாங்க இணையதளமான scamalert.sg புகார் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

அந்த புகாரின்படி, அவருக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் சுகாதாரத்துறையில் இருந்து அதிகாரிகள் பேசுவதாகவும், தடுப்பூசி விரைந்து போட்டுக்கொள்ள ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறியும் மலாய் மற்றும் ஆங்கில மொழியில் அந்த தானியக்க குரல் கூறியதாக மே ஒன்பது பதிவான அந்த புகாரில் இருந்தது. ஏற்கனவே தடுப்பூசி போட்டு விட்டோம் மீண்டும் ஏன் இவர்கள் அலைகிறார்கள் என சந்தேகம் எழவே அவர் புகார் கொடுத்ததாக தெரிவித்தார்.

தடுப்பூசி மற்றும் ரெம்டேசிவிற் போன்ற எதிர்ப்பு சக்தி மருந்து தொடர்பாக இது போன்ற மோசடிகள் நடத்தப்படுவதாக காவல்துறையின் உளவியல் சேவை பிரிவு முதன்மை உளவியல் நிபுணரான திருவாட்டி கேரோலின் மிசிர் தெரிவித்துள்ளார். மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதார துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இது போன்ற மோசடிகளில் சிலர் பணம் இழந்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை மோசடி கும்பல் பயன்படுத்தும் இணையதளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் போன்றவை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.