முகக்கவசம் அணிவதில் அலட்சியம்… ஆண் நபர்கள் மீது விசாரணை!

Photo: Masagos Zulkifli Official Facebook Page

 

சிங்கப்பூரில் அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, சிங்கப்பூர் முழுவதும் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. அதேபோல், கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும், பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களை அரசு அறிவுறுத்தி வருகின்றது. முகக்கவசம் முறையாக அணிந்திருந்தால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை என்று மருத்துவர் வல்லுநர்கள் கூறுகின்றன.

 

பொதுமக்கள் பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் முறையாக முகக்கவசம் அணிந்துள்ளனவா என்பது குறித்து கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாதவர்களை அறிவுறுத்தியும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.

 

கடந்த மே 31- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள பிடோக் மால் கடைத்தெருவில் 47 வயதுடைய ஆண் நபர் ஒருவர் முகக்கவசத்தை சரியாக அணியாமல் இருந்துள்ளார். அவரை அதிகாரி சரியாக முகக்கவசத்தை அணியும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து, தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

 

அதேபோல், கடந்த ஜூன் 21- ஆம் தேதி அன்று டியோ ஹெங் சாலையில் 33 வயதுடைய ஆண் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை என்றும், முகக்கவசத்தை அணியுமாறு அதிகாரி அறிவுறுத்தியும் அவர் அணிய மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டியும், அதிகாரியை இரண்டு முறை தள்ளியதாகக் கூறப்படுகிறது.

 

அதே நாளில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எண் 10 காலாங் சாலையில் 40 வயதுடைய ஆண் நபர் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை என்றும், அவரை அறிவுறுத்திய குடிநுழைவு சோதனைச் சாவடிகளின் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

 

ஜூன் 26- ஆம் தேதி அன்று ஆல்பர்ட் சென்டர் சந்தை, உணவு நிலையத்தில் 40 வயதுடைய ஆண் நபர் ஒருவர் முகக்கவசத்தை முறையாக அணியாமல் இருந்ததாகவும், மூக்கிற்கு மேல் முகக்கவசத்தை அணிய அதிகாரிகள் வலியுறுத்தியபோது, அதிகாரியை அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

 

இவர்கள் அனைவரின் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஒருவர் முகக்கவசம் அணிவது பலரையும் பாதுகாக்கும் என்ற சமூக உணர்வோடு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செய்யப்பட்டால், கொரோனாவை ஒழித்திட முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே, நாட்டு மக்களைக் காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.