சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான தகவல்கள்!

TODAY

 

சிங்கப்பூரில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து 1,000- ஐ கடந்து வருகிறது. அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது சுகாதாரத்துறை.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (25/09/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “நேற்று (25/09/2021) மதியம் நிலவரப்படி, சிங்கப்பூரில் 1,443 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக 1,000- ஐ தாண்டியுள்ளது. உள்ளூர் அளவில் 1,424 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் வேலையிட நடவடிக்கைகள் கடுமை: வீட்டிலிருந்து வேலை செய்வது கட்டாயம்

இதில் சமூக அளவில் 1,053 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடு ஊழியர்கள் வசிக்கும் விடுதிகளில் 371 பேர், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 19 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,949 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்கள் மூன்று பேரும் முதியவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, செப்டம்பர் மாதம் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலாதார பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் அதிவேகமாக உயர்ந்தது!

தற்போது கொரோனா பாதிப்புக்கு 1,142 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 165 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 27 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.