COVID-19: சிங்கப்பூரில் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறியதாக 3 பேர் மீது குற்றச்சாட்டு..!

சிங்கப்பூரில் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறியதாக இரண்டு ஆடவர் மற்றும் பெண் ஒருவர் மீதும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் 48 வயதான சோங் சுன் வா என்பவர், இந்தோனேசியாவிலிருந்து திரும்பியதும் அவருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மூன்று முறை புக்கிட் படோக் வட்டாரத்தில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் டெங்கு சம்பவங்கள் 16,000ஐ தாண்டலாம் : NEA..!

சோங், கடந்த மார்ச் 17 அன்று சிங்கப்பூர் திரும்பியுள்ளார், அதன் பின்னர் மார்ச் 17 முதல் மார்ச் 31 வரை வீட்டிலேயே இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மார்ச் 24 அன்று உணவு வாங்க ஜுராங் கிழக்கு பகுதிக்கு பேருந்தில் சென்றதாக கூறப்படுகிறது.

குறிப்பாக மார்ச் 29 அன்று, அவர் புக்கிட் படோக்கில் உள்ள ஒரு காபி கடைக்கு உணவு வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார், மேலும் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை அங்கு இருந்தாகவும் கூறப்படுகிறது.

மற்றொருவர், 25 வயதான சிட்டி வான் சு’அய்தா சம்சூரி (Siti Wan Su’Aidah Samsuri) என்ற பெண் கடந்த மார்ச் 25 அன்று ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பினார். அதை தொடர்ந்து, ஏப்ரல் 8 வரை வீட்டிலேயே இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும், அவர் மார்ச் 30 அன்று உட்லேண்ட்ஸில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி, மளிகைப் பொருட்கள் மற்றும் சிகரெட்டுகளை வாங்க விஸ்டா பாயிண்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரிகளிடமிருந்து வந்த பல தொலைபேசி அழைப்புகளை அவர் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடைசியாக, 44 வயதான அமெரிக்க வணிக விமானி பிரையன் டுகன் இயர்கன், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வந்துள்ளார்.

மேலும் அவருக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் குறுகிய கால வருகை அனுமதி வழங்கப்பட்டது என்று ICA அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பின்னர், கடந்த ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 17 வரை அவருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கு இணங்காமல் அவர் தங்கியிருந்த கிரவுன் பிளாசா சாங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5ஆம் தேதி, சிட்டி ஹால் MRT நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார், அதில் அவர் சுமார் மூன்று மணி நேரம் செலவழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் எதிர்கொள்வர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 19வது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!