மரணத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வெளிநாட்டு நபர்!

Photo: Screengrab from Google Maps

காதலியைக் கொலைச் செய்ததற்காக விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை எதிர்த்து வெளிநாட்டைச் சேர்ந்த நபர் மேல்முறையீடு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் அகமது சலீம். இவருக்கு வயது 31. இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும், அகமது சலீமுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கெய்லாங்கில் உள்ள ‘கோல்டன் டிராகன்’ என்ற ஹோட்டலில் (Golden Dragon Hotel) அகமது சலீம், தனது காதலியைத் துண்டு மூலம் கழுத்தை நெரித்தும், கழுத்தைத் திருப்பியும் கொலைச் செய்துள்ளார்.

250 பேரை வேலைக்கு எடுக்கும் பிரபல விமான நிறுவனம்!

இது தொடர்பாக, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர், ஹோட்டலின் வரவேற்பாளர் உதவியுடன் அந்த பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் காதலனான அகமது சலீமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனக்காக மற்றோரு ஆண் நபரிடம் இருந்து விலக அந்தப் பெண் மறுத்ததால் அவரைக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அகமது சலீம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தகுந்த ஆதாரங்கள் மூலம் நிரூபணமானதால், அவருக்கு மரணத் தண்டனை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது கூறிய நீதிபதி, அகமது அந்தப் பெண்ணைக் கொலை செய்ய நன்கு திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெளிவானது என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வு!

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் விதித்த மரணத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி அகமது சலீம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (12/10/2021) நடைபெற்றது. அப்போது அகமது சலீம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மரணத் தண்டனையை ரத்துச் செய்து குறைந்தப்பட்சத் தண்டனையை வழங்குமாறு வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.