“வலிமையான சிங்கப்பூர் ஆயுதப்படையைக் கட்டிக்காக்க வேண்டும்”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உரை!

Photo: Prime Minister Office Singapore

சிங்கப்பூரின் தேசிய தினத்தையொட்டி, தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் லீ சியன் லூங் இன்று (09/08/2022) காலை உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, பிரதமரின் உரையை தமிழ், மலாய், சைனீஸ் ஆகிய மொழிகளில் அமைச்சர்கள் வழங்கினர். அந்த வகையில், சிங்கப்பூரின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், பிரதமரின் தேசிய தின உரையை தமிழில் வழங்கினார்.

சிங்கப்பூரிலுள்ள தமிழக ஊழியர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் ! – மனதை நெகிழ வைத்த பிறந்தநாள் விழா

அப்போது அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறியதாவது, “நமக்கு முன்னே இருக்கும் பாதை கரடுமுரடானது. அமெரிக்காவும், சீனாவும் எதிரும், புதிருமாக இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் இப்போதைக்குச் சமரசம் ஏற்படாது என்றே தோன்றுகிறது. சொல்லப்போனால், இந்த நிலைமை மோசமடையாமல் இருந்தாலே போதும். ஆனால் தவறுகள் எளிதில் ஏற்படலாம்.

ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அணுவாற்றல் கொண்ட ரஷ்யாவுக்கு எதிராகப் பல நாடுகள் திரும்பியுள்ளன; குறிப்பாக, அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும். மிக ஆழமான இந்தப் பிரச்சினைக்குச் சுலபமாகத் தீர்வு கண்டுவிட முடியாது. ரஷ்யாவின் நடவடிக்கை உலகநாடுகளின் அரசுரிமைக் கொள்கைகளுக்குப் புறம்பானது.

இந்தக் கொள்கைகள் சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியமானவை. நம் நாட்டின் பாதுகாப்புக்கும் உயிர்வாழ்வுக்கும் இந்த அரசுரிமைக் கொள்கைகள் ஆணிவேர் போன்றவை. மேலும் ரஷ்யப் படையெடுப்பு ஆசிய- பசிபிக் வட்டாரத்தின் பாதுகாப்பையும் பாதிக்கும். இந்த வட்டாரத்தின் பதற்றம் நம்மைச் சூழக்கூடும்.

பெற்ற மகளிடம் அப்பா செய்யும் காரியமா இது! – சிங்கப்பூரில் தாய் இறந்த பிறகு தந்தைக்கு கிடைத்த தண்டனை!

இதற்கு நாம் என்ன செய்யலாம்? ஒற்றுமை! அதுதான் சிங்கப்பூரின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை. சர்ச்சைக்குரிய உலகின் சவால்களைச் சமாளிக்க அதுவே வழி. முழுமைத் தற்காப்பில் நாம் கவனம் செலுத்தவேண்டும். வலிமையான சிங்கப்பூர் ஆயுதப்படையைக் கட்டிக்காக்க வேண்டும். இந்த வட்டாரம் முன்புபோல் அமைதியாகவும், நிலையாகவும் வருங்காலத்திலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த உடனடிப் பிரச்சினைகளோடு நாம் நீண்டகால இலக்குகளையும் கவனிக்கவேண்டும். நான் Gardens by the Bay எனப்படும் கரையோரப் பூந்தோட்டத்திலிருந்து பேசுகிறேன். இந்த ஆண்டு கரையோரப் பூந்தோட்டம் அதன் பத்தாம் ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது. இந்த இடம் முன்பு கடலாக இருந்தது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள நிலத்தை மீட்டு மரினா பே வட்டாரத்தை உருவாக்க சுமார் 50 ஆண்டுக்கு முன்னர் முடிவெடுத்தோம்.

இங்கே அலுவலகம், குடியிருப்புக் கட்டடம் மட்டும் இருந்தால் போதாது; எழில் கொஞ்சும் பசுமை நிறைந்திருக்கவேண்டும் என்று நினைத்தோம். அதில் உருவானதுதான் இந்தக் கரையோரப் பூந்தோட்டம். 2012ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரர்களின் பெருமிதத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உரிய இடமாக இது விளங்குகிறது. விரைவில் பே ஈஸ்ட் தோட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும். அங்குதான் சிற்பிகள் நினைவகம் அமையவிருக்கிறது.

“நமது சிங்கப்பூர் வெள்ளியை வலுப்படுத்தியுள்ளோம்”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உரை!

சிங்கப்பூரில் இப்படித்தான் நாம் திட்டமிடுகிறோம். துணிந்து கனவுகாணவேண்டும். அடுத்தகட்ட இலக்குகளில் கவனம் செலுத்தவேண்டும். மேம்பட்ட தீர்வுகளையும், புதிய வாய்ப்புகளையும் ஆராயவேண்டும். அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகள் என்று இல்லாமல், அடுத்த 30 அல்லது 50 ஆண்டுகளுக்கு அப்பால் முன்னோக்கித் திட்டமிட வேண்டும்.

அதனால்தான் நகரச் சீரமைப்பு ஆணையம் சென்ற ஆண்டு நீண்டகாலத் திட்டம் குறித்து மறுஆய்வைத் தொடங்கியது. நமது தீவை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் யோசனைகளை மக்களிடம் கேட்டறிந்தது. நகரச் சீரமைப்பு ஆணைய நிலையத்தில் தற்போது ஒரு கண்காட்சி நடைபெறுகிறது. அதில் வருங்காலத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய சமூகங்களையும், பசுமை இடங்களையும் உருவாக்கும், கருத்துகளும் உள்ளன. நமது கனவுகளைப் பிரதிபலிக்கும் இந்தக் கருத்துகள் நமது வேர்களை வலுப்படுத்தும். நாம் வாழும், வேலைசெய்யும், விளையாடி மகிழும் முறையை மாற்றியமைக்கும். சிங்கப்பூரர்கள் இன்னும் ஏராளமானவற்றை எதிர்பார்க்கலாம்.

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிங்கப்பூர்”… தங்கம் வென்று சாதனை படைத்த சிங்கப்பூர் ஜோடி!

இந்த நீண்டகாலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு பற்றியது மட்டுமல்ல. பொருளியல் வளர்ச்சியையும் சமுதாயத்தின் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் நாம் கட்டிக்காக்க வேண்டும். மக்களின் முழு ஆற்றலை வெளிக்கொண்டுவரவேண்டும். நமது எதிர்காலத் தலைமுறையினர் வாழையடி வாழையாக வாழ்வதற்கு ஒளிமயமான வருங்காலத்தை உருவாக்கவேண்டும். இந்த இலக்கை அடைய ஒவ்வொரு தலைமுறையும் தாங்கள் பெற்றுக்கொண்டதைவிட மேம்பட்ட சிங்கப்பூரை உருவாக்கத் துணிச்சலுடன் பாடுபடவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.