“வீடமைப்புத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்”- தேசிய தினச் செய்தியில் பிரதமர் லீ சியன் லூங் தகவல்!

"வீடமைப்புத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்"- தேசிய தினச் செய்தியில் பிரதமர் லீ சியன் லூங் தகவல்!
Photo: Singapore Prime Minister

 

 

சிங்கப்பூரின் தேசிய தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வெளியிட்டுள்ள தேசிய தினச் செய்தியில், “என் சக சிங்கப்பூரர்களே, வணக்கம்! இவ்வாண்டு சிங்கப்பூரின் 58ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறோம். நாம் ஓர் இளம் நாடாக இருந்தாலும், பல சவால்களை இதுவரை சமாளித்து வந்துள்ளோம். சிங்கப்பூர் நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளது. இதற்குக் காரணம், நமது ஒற்றுமையே. இந்த ஒற்றுமை நம்மை ஒன்றாகப் பிணைக்கும். அதன் காரணமாக, எதிர்காலத்தில் சிரமமான காலங்களிலும்கூட, ‘நாம் வெற்றி அடைவோம்’ என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

கிரைண்டரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்…. விமான நிலையத்தில் சிக்கிய பயணி!

உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. விலைவாசிகள் உயர்ந்து வருகின்றன. குடும்பங்களையும் தொழில்களையும் அது பாதித்துள்ளது. அரசாங்கத்தால் முடிந்தளவு உங்களுக்கு உதவி செய்வோம். குறிப்பாக, நடுத்தர, குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உத்தரவாதத் தொகுப்புத்திட்டம் உதவும். மற்ற பல ஆதரவுத் திட்டங்களும் உள்ளன. இந்தச் சிறிது சிரமமான நிலைமை இன்னும் கொஞ்சம் காலத்திற்கு நீடிக்கலாம். இதனைச் சமாளிக்க அரசாங்கம் உங்களுக்குத் துணைநிற்கும். இந்த உரையில் அடுத்து, நான் அண்மையில் நடந்த சில விஷயங்களைப் பற்றிப் பேசுகிறேன்.

அண்மையில், அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பற்றிய சில சர்ச்சைகள் எழுந்தன. இத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது எழத்தான் செய்யும். நாம் அவற்றை எவ்வாறு கையாள்கிறோம் என்பது முக்கியம். இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக, நேர்மையாக, கண்ணியமாகக் கையாளவேண்டும். நாம் அப்படித்தான் செய்தோம்.

முதல் சம்பவத்தில், இரு அமைச்சர்களுக்குப் பாரபட்சம் உள்ள வகையில் சில சலுகைகள் அளிக்கப்பட்டதாகக் கேள்விகள் எழுந்தன. நான் இரு அமைச்சர்களும் முழுமையாக விசாரிக்கப்பட ஆணையிட்டேன். இறுதியில் அவர்கள் தவறு எதுவும் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டது.

இரண்டாவது சம்பவத்தில், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அமைச்சர் ஒருவரைக் கைது செய்து விசாரித்து வருகிறது. முழு விசாரணை இன்னும் தொடர்கிறது.

இந்தியா உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவைகளை அதிகரிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

மூன்றாவது சம்பவத்தில், நாடாளுமன்ற நாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. அது சரியில்லை. இருவரும் பதவி விலகினர்.

நான் கூறியதுபோல், மூன்று விஷயங்களிலும் வெளிப்படையாக, நேர்மையாக, கண்ணியமாக நாம் செயல்பட்டுள்ளோம்.

நான் ஆணித்தரமாகக் கூறுகிறேன். நமது அரசாங்கம் ஊழலற்ற, நேர்மையான முறையில் நாட்டை நடத்தும். சிங்கப்பூரர்களும் நமது பங்காளிகளும் அதனை எதிர்பார்க்கிறார்கள். நேர்மை, நாணயம், ஒழுக்கம் ஆகியவற்றை நாம் உயரிய நிலையில் கட்டிக்காப்போம்.

பெரும்பாலான சிங்கப்பூரர்கள், அரசாங்கத்தின்மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனை நாம் கட்டிக்காப்போம். வலுப்படுத்துவோம்.

அரசாங்கத்தின்மீது மக்கள் கொண்ட நம்பிக்கையால், நாம் மூவாண்டு இருந்த கிருமிப்பரவலை ஓரளவு நல்ல முறையில் சமாளித்தோம். அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளிலிருந்து சீக்கிரத்தில் நாம் மீண்டுவிட்டோம். தற்போது, பிரச்சினைகள் சூழ்ந்த உலகில், நாம் வலிமையுடன் செயல்படும் நாடாகத் திகழ்வதற்கு அந்த நம்பிக்கையே மூலக்காரணம்.

சிங்கப்பூரில் திடீரென தோன்றிய மர்ம கருப்பு வளையம்: என்ன அது? – பொதுமக்கள் குழப்பம்

இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், சிங்கப்பூரர்களுக்கு முக்கிய தேவைகளில் ஒன்று ‘வீடு’. முக்கியமாக, நல்ல, கட்டுப்படியான வீடுகள். வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், நமக்கு வெறும் வீடு மட்டுமல்ல. அவை, நாம் பெருமையுடன் உரிமை கோரும் இல்லம்; நமது குடும்பங்கள் வாழும் அக்கம் பக்கப் பேட்டை; நாம் ஒன்றிணைந்து உருவாக்கும் சமூகம்.

இன்று, நான் சிங்கப்பூரின் பழமையான வீடமைப்புப் பேட்டைகளில் ஒன்றான குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் உள்ள SkyOasis@Dawson கட்டடத்திலிருந்து உங்களுடன் பேசுகிறேன். 1950- களில், குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில்தான் SIT கட்டிய முதல் சில வீடுகள் அமைந்திருந்தன. சுமார் 15 ஆண்டுக்கு முன், நாம் இப்பேட்டையைப் புதுப்பிக்கத் தொடங்கினோம்; புதிய கழக வீடுகளைக் கட்டினோம்; பொது இடங்களைப் பொழிவாக்கினோம். இப்போது, அழகான, மக்கள் விரும்பும் குடியிருப்புப் பேட்டைகளில் ஒன்றாக டாவ்சன் திகழ்கிறது – சிங்கப்பூர் வீடமைப்பு வரலாற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஆரம்பத்திலிருந்து, அரசாங்கம் வீடமைப்பில் பெரும் முதலீடு செய்துள்ளது. லட்சக்கணக்கான சிங்கப்பூர்க் குடும்பங்களுக்குக் கட்டுப்படியான, உயர் தரமான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.

இதுவரை, அரசாங்கம் முதிர்ச்சி அடைந்த பேட்டைகளிலும் முதிர்ச்சி அடையாத பேட்டைகளிலும் வீடுகளைக் கட்டி வந்துள்ளது. முதிர்ச்சி அடையாத பேட்டைகளிலுள்ள வீடுகளின் விலை குறைவாக இருக்கும். அதற்குக் காரணம், அவற்றைச் சுற்றியுள்ள வசதிகள் சற்று குறைவாக இருக்கலாம்; அல்லது அதன் அமைவிடம் சற்று தொலைவாக இருக்கலாம். அதேவேளையில், முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில், வீடுகளைச் சுற்றியுள்ள வசதிகளும் அவற்றின் அமைவிடமும் மேலும் சிறப்பாக இருக்கக்கூடும். அதனால், பலரும் அவற்றை விரும்புவர். அவற்றின் விலையும் முதிர்ச்சி அடையாத பேட்டைகளைவிட அதிகமாகவே இருக்கும்.

ஆனால், நம் வீடமைப்புச் சூழல் மாறி வருகிறது. நாம் தொடர்ந்து மேலும் அதிகமான வீடுகளைக் கட்டிவரும் வேளையில், முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் பயன்படுத்தப்படாத நிலப்பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேநேரத்தில், தற்போதைய முதிர்ச்சி அடையாத பேட்டைகளின் போக்குவரத்து வசதிகள் மேம்படும்போது, அவையும் முதிர்ச்சி அடைந்த பேட்டைகளுக்கு நிகராக மேம்பாடு காண்கின்றன.

எனவே, வருங்காலத்தில், டாவ்சன் போன்ற முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில், மேலும் அதிகமான வீடுகள் கட்டப்படும். அத்தகைய வீடுகளுக்கான தேவை இயல்பாகவே அதிகரிக்கும். அவற்றின் தொடக்க விலையும் மறுவிற்பனை விலையும் அதனைப் பிரதிபலிக்கும்.

சூழ்நிலை மாறி வந்தாலும், அனைத்து வருமானப் பிரிவுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கும் வீடு எளிதில் கிடைக்கும்படி நாம் செய்யவேண்டும். விலை கட்டுப்படியாக இருக்கவேண்டும். அதை நாம் தொடர்ந்து உறுதிசெய்யவேண்டும். எதிர்காலத்தில், நமது பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் நமது பொது வீடமைப்பு வலுவாய் இருக்கவேண்டும். இது எங்களுடைய வாக்குறுதி. நாங்கள் இதனைக் கட்டாயம் நிறைவேற்றுவோம்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை’- அக்டோபர் மாதம் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்த இலக்குகளை அடைவதற்கு, நாம் நம்முடைய வீடமைப்புத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். தேசிய தினக் கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, இதைப் பற்றிக் கூறுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமரின் தேசிய தினச் செய்தியை சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம் தமிழாக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.