“காலம் கடந்து விடுவதற்கு முன் விழித்துக்கொள்ளுங்கள்”- முதியவர்களுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தல்!

Photo: Minister Lawrence Wong Official Facebook Page

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொண்டு வருகின்றன. இருப்பினும் முதியவர்களில் சிலர் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பூசித் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பிரதமர் லீ சியன் லூங் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், “சிங்கப்பூரில் 2,00,000 முதியவர்கள் இன்னும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாமல் இருக்கின்றன. 60 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடைய முதியவர்கள் உடனடியாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். நடக்க முடியாத முதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ குழு கொரோனா தடுப்பூசியைப் போடும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா பரிசோதனை பணிகளைப் பார்வையிட்ட பிரதமர் லீ சியன் லூங்!

அதன் தொடர்ச்சியாக, துணை பிரதமர் ஹெங் சுவீ கியட், நிதியமைச்சர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வ் ஃபேஸ்புக் பக்கத்தில், “முதியவர்கள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியம்” குறித்து விளக்கினர்.

அதில், “கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; காலம் கடந்து விடுவதற்கு முன் விழித்துக்கொள்ளுங்கள்; ஒவ்வொருவரும் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயமானது” என்ற ஒருமித்தக் கருத்தை துணை பிரதமர் உட்பட மூன்று அமைச்சர்களும் சுட்டிக்காட்டினர்.

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், “பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் முழுமையாக கொரோனா தடுப்பூசிப் போட்டு கொண்டவர்களின் அளவு, சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்” என்று தெரிவித்தார்.

அதிக வாடகையால் அவதிப்பட்டுவரும் லிட்டில் இந்தியா வணிகர்களுக்கு ஆதரவளிக்க கோரிக்கை!

“முதியவர்கள் கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ள முன்பதிவு தேவையில்லை; அவர்கள் நேரடியாக தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம்” என்று துணை பிரதமர் ஹெங் சுவீ கியட் சுட்டிக்காட்டினார்.

“அனைத்து பகுதிகளிலும் நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்று கொரோனா சிறப்பு பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று முதியவர்களுக்கு எளிதாகப் பரவ அதிக அளவு வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. இதனால் முதியவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு வலியுறுத்தி வருகிறது.