அரவை இயந்திரத்தில் விரல்களைப் பறிகொடுத்த வெளிநாட்டு பணிப்பெண்- கடைக்காரருக்கு சிறை, அபராதம் விதிப்பு!

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் லிம் ஷெங் சோங் (வயது 59). இவர் சிங்கப்பூரில் உணவுக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு கோ சியூ இம் என்ற மனைவியும், லிம் சோக் ஹோங் என்ற 36 வயது மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், லிம் சோக் ஹோங், மியான்மர் நாட்டைச் சேர்ந்த சூ சூ மார் என்ற பெண்ணை வேலைக்கு எடுத்திருந்தார். இருப்பினும், அந்த பணிப்பெண் ஹோங்கிடம் பணிப்புரியவில்லை. கடந்த 2017- ஆம் ஆண்டு, அந்த பணிப்பெண்ணை தனது வீட்டில் தங்க வைப்பதற்கு பதில் தனது தந்தை மற்றும் தாய் ஆகியோரின் வீடுகளில் தங்க வைத்துள்ளார்.

சிறப்புப் பயண ஏற்பாட்டை அதிகமான நாடுகளுக்கு நீட்டித்த சிங்கப்பூர்… பயண முகவர்கள் வரவேற்பு!

வீட்டு வேலை செய்வதற்காக பணியமர்த்தப்பட்ட, அந்த பணிப்பெண்ணை லிம் ஷெங் சோங்கின் மனைவி, தனது கணவரின் உணவுக்கடைக்கு தேவையானவற்றைச் செய்துக் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து, அந்த பணிப்பெண் உணவுக் கடைக்கு தேவையானவற்றைத் தயார்படுத்துவதற்காக தினந்தோறும் அதிகாலை 02.00 மணிக்கு எழுந்து வேலை செய்து வந்தார். காலை 07.00 மணி முதல் 09.30 மணி வரை ஓய்வெடுத்துக் கொள்ள பணிப்பெண்ணுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, காலை 09.30 மணி முதல் இரவு 07.00 மணி வரை வேலை செய்து வந்தார்.

அதிகாலை 02.00 மணியில் இருந்து இரவு 07.00 மணி வரை வேலை செய்து வந்த அந்தப் பணிப்பெண்ணுக்கு மாதம் சம்பளமாக 600 சிங்கப்பூர் டாலர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது வந்துள்ளது. அவர் கூடுதல் நேரம் பணியாற்றி வந்த நிலையில், அதற்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வேலையிடத்தில் ஏற்படும் விபத்துகளே, அதிக மரணங்களுக்கு முக்கிய காரணம்!

இந்நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31- ஆம் தேதி அன்று, அந்த பணிப்பெண் உணவுக்கலவையை அரவை இயந்திரத்தில் அரைப்பதற்காக வெண்ணெய் வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியால், அந்த கலவையை அரவை இயந்திரத்தில் தள்ளி விட்டார். அப்போது, அந்த கத்தி கை நழுவி உள்ளே விழுந்திவிட்டது. அதை எடுப்பதற்காக, அந்த பணிப்பெண் தனது வலது கையை ஓடிக்கொண்டிருந்த அரவை இயந்திரத்திற்குள் விட்டிருக்கிறார். அப்போது, அந்த இயந்திரத்தில் இருந்த கத்தி, பணிப்பெண்ணின் நான்கு விரல்களைத் துண்டித்துவிட்டது.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உணவுக் கடைக்காரர் லிம் ஷெங் சோங்-கை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பணிப்பெண்ணை அவசரப்படுத்தியதால் தான் இந்த அசம்பாவிதம் நடந்தது தெரிய வந்தது. மேலும், கடையில் சரியான முறையில் வேலையிடப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாததும் தெரிய வந்தது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண திட்டம் – முன்பதிவுக்காக முடங்கிய விமான இணையதளம்

இதையடுத்து, உணவுக்கடையின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வேலையிட பாதுகாப்பு விதிகளை மீறியது, வெளிநாட்டு மனித வேலை வாய்ப்பு விதிகளை மீறியது ஆகிய இரு குற்றச்சாட்டுகளும் லிம் ஷெங் சோங் மீது சுமத்தப்பட்டது.

குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணம் ஆனதால், அவருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனையும், 19,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.