சிங்கப்பூரில் கொரோனாவின் தற்போதைய நிலை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Photo: Ministry Of Health/Facebook Page

 

சிங்கப்பூரில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த கொரோனா பரவல், அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது சற்று குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்ய தேவையில்லை. அதேபோல், வீட்டை விட்டு வெளியே வர இயலாத முதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இருப்பினும், சில முதியவர்கள் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில், பிரதமர், துணைப் பிரதமர், அமைச்சர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சட்டவிரோதமாக தங்கியிருந்த சீன பெண்கள்… வசிப்பிடம் கொடுத்தவருக்கு சிறை!

தற்போதைய நிலையில் எத்தனை பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எத்தனை பேர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து வரிவாகப் பார்ப்போம்!

சிங்கப்பூரில் கடந்த இரண்டு நாட்களில் மூன்று புதிய கொரோனா கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவற்றில், SAFRA தெம்பனிஸ் (Tampines), சின் சுவீ (Chin Swee) சாலையில் உள்ள ‘My First Skool’ பாலர்பள்ளி ஆகியவையும் அடங்கும். கிருமித்தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்ட இடங்களில் வசிக்கும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

சிங்கப்பூரில் சுமார் 470 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 36 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், 9 பேர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இந்த 45 பேரில், 5 பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். கொரோனா பாதிப்பால் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

2022க்கான கல்வி ஆண்டின் வேலை மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சிங்கப்பூரில் மொத்த மக்கள் தொகையில் 73% பேர் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் நமக்கு கூறுகின்றன. கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 81% ஆக உள்ளது. ஆகஸ்ட் 11- ஆம் தேதி நிலவரப்படி, 8.24 மில்லியன் முறை தடுப்பூசி, சுமார் 4.39 மில்லியன் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 3.97 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.

‘Temasek Foundation’ என்ற தொண்டு நிறுவனம் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச ஆக்சிமீட்டர் கருவியை வழங்கி வருகிறது. இதற்கான துண்டு பிரசுரங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்டிருந்தது. அதனை எடுத்துக் கொண்டு பொதுமக்கள் கடைகளுக்கு சென்று ஆக்சிமீட்டர் கருவியை இலவசமாகப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ‘Temasek Foundation’ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆக்சிமீட்டர் கருவியின் விநியோக நடவடிக்கையின்போது அவற்றைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், அவற்றை இம்மாத இறுதிக்குள் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு முன்பதிவு செய்துகொண்டு, டோபி காட்டில் (Dhoby Ghaut) உள்ள Temasek Shophouse- ல், முறையான ஆவணத்தைக் காட்டி அதனைப் பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளது.

பல தரப்பினரும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாக உள்ளது. அரசின் விரைவான கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நம்மையும் காப்போம்! நமது குடும்பத்தினரையும் காப்போம்! நாட்டு மக்களையும் காப்போம்!