“நாம் அனைவரும் தனிப்பட்ட, சமூகப் பொறுப்புணர்வைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்”- பிரதமர் லீ சியன் லூங் உரை!

Photo: Prime Minister's, Singapore

சிங்கப்பூரின் கோவிட்-19 நிலைமை குறித்து பிரதமர் லீ சியன் லூங் நேற்று (24/03/2022) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு எல்லைகளை திறக்கும் “சிங்கப்பூர்-மலேசியா” – கோவிட்-19 சோதனைகள் இல்லை!

பிரதமரின் லீ சியன் லூங் கூறியதாவது, “அனைவரின் ஒட்டுமொத்த முயற்சியால் மட்டுமே நாங்கள் இதைச் சாதித்தோம். நீங்கள், இப்பயணத்தின் இலக்கைப் புரிந்துகொண்டு, உங்கள் பங்கை ஆற்றினீர்கள். அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தீர்கள். மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டீர்கள். பொறுமையாகவும், பொறுப்பாகவும் பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தீர்கள். நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள். ஒருவருக்கு மற்றொருவர் உதவி செய்ய உங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டீர்கள். ஆண்டிஜன் விரைவுப் பரிசோதனைகள் மூலம் உங்களைச் சுயமாகப் பரிசோதித்துக்கொண்டு, உங்களுக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டால், நீங்களே உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டீர்கள்.

தொழில்களும் அத்தியாவசிய ஊழியர்களும், நம் பொருளாதாரத்தையும், சமூகச் சேவைகளையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள தங்கள் பங்கை ஆற்றினர். அவர்கள் மாறிவந்த பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஏற்ப தங்களைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டனர். விநியோகத் தொடர்கள், மனிதவளம் ஆகியவற்றில் ஏற்பட்ட இடையூறுகளைச் சமாளித்தனர். கடுமையான சவால்களை எதிர்கொண்டபோதிலும் மீள்திறனுடன் இருந்தனர். குறிப்பாக, மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில். உங்கள் மனவுறுதிக்கும் வளமைத் திறத்திற்கும் நன்றி, நாம் சிங்கப்பூரர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தோம்; கிருமிப்பரவல் சூழலிலிருந்து மேலும் வலிமையுடன் மீண்டெழுவதற்காக நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொண்டோம்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்.!

முக்கியமாக, நம் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். கணிசமான, தனிப்பட்ட இழப்புகளுக்கு இடையில், நீங்கள் மகத்தான தியாகங்களைச் செய்தீர்கள். கிருமிப்பரவல் தொடங்கியது முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், நீண்டநேரத்திற்கு வேலை செய்து வருகிறீர்கள். கிருமித்தொற்றுக்கு ஆளாகிய சக ஊழியர்களுக்குப் பதிலாக, உங்கள் ஓய்வு நாட்களில் வேலைக்குத் திரும்பினீர்கள். மருத்துவமனைகளில் இருந்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் ஈடுகொடுத்திருந்தீர்கள்.

கோவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கவனித்துக் கொண்ட வேளையில், அக்கிருமியால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டீர்கள். உங்களால்தான், கடந்த ஈராண்டுகளில் ஓரளவு இயல்புநிலையை நம்மால் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. சில நாடுகளில், பெரிய அளவிலான சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டுச் சென்றுள்ளனர். ஆனால், நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், மருத்துவர்கள், தாதியர் ஆகியோர் தங்கள் பணிகளில் தொடர்ந்து இருந்தனர்; தங்கள் கடமைகளைத் தொடர்ந்து ஆற்றி வந்தனர். எனவே, நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் முன்னிலை ஊழியர்களுக்கும், நன்றியுணர்வு மிக்க ஒரு தேசத்தின் சார்பில், நான் கூற விரும்புவது: மிக்க நன்றி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

இப்போது நாம், நம்முடைய கோவிட்-19 பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்துள்ளோம். நமது மக்கள்தொகையில் பெரும்பாலானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்; கிட்டத்தட்ட, தகுதிபெற்ற அனைவரும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். ஓமிக்ரான் கிருமித்தொற்று அலை, உச்சத்தை எட்டியுள்ளது; தற்போது தணிந்து வருகிறது. நம்மில் பலர் அக்கிருமியால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு, குணமடைந்திருப்பதால், நமது மக்கள்தொகை மேலும் வலுவான நோய் எதிர்ப்புசக்தியைப் பெற்றுள்ளது.

முக்கியமாக, நமது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு தொடர்ந்து மீள்திறனுடன் இருந்துள்ளது. ஓமிக்ரான் கிருமித்தொற்று அலையின் உச்சத்தில், அது அதிகமான நெருக்குதலுக்கு உள்ளானது. ஆனால், அது நிலைமையைச் சமாளித்தது. அவர்களுடைய பணிச்சுமை இன்னும் அதிகமாகவே உள்ளது. ஆனால், நெருக்குதல் இப்போது குறைந்து வருகிறது. கட்டுப்பாடுகளைத் தளர்த்த எவ்வளவு தூரமாகவும், வேகமாகவும் செயல்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதே வேளையில், நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களையும் கட்டமைப்பையும் நொடித்துப் போகும் அளவிற்கு நெருக்கக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக உள்ளோம்.

நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் மீது நாம் தாளமுடியாப் பளுவைச் சுமத்திவிடக் கூடாது; மருத்துவச் சிகிச்சை அவசரமாகத் தேவைப்படும் கோவிட்-19, கோவிட்-19 சாரா நோயாளிகள் பலரின் உயிர்களுக்கு ஆபத்து விளைவித்திடும். அதே வேளையில், கெடுபிடியான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள், தொழில்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும் பாதிப்பையும், கல்வி கற்கவேண்டிய பிள்ளைகள், உறவாட ஏங்கும் இளையர்கள், ஒன்றிணைய விழையும் குடும்பங்கள், தொடர்புகொள்ள முனையும் சமூகங்கள் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அனைத்து அம்சங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது, கோவிட்-19 கிருமியுடன் வாழ்வது தொடர்பில் நாம் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க இப்போது தயாராக இருப்பதாய் நம்புகிறோம்.

கத்தார் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அமைச்சர் டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான்!

நமது பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகளுக்கு, பின்வரும் மாற்றங்களை நாம் செய்யவிருக்கிறோம்: முதலில், குழு அளவை இரட்டிப்பாக்கவுள்ளோம், ஐந்து நபர்களிலிருந்து 10 நபர்களுக்கு. இரண்டாவது, வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய 75 விழுக்காடு ஊழியர்கள், இனி தங்கள் வேலையிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர். மூன்றாவது, பெரிய நிகழ்ச்சிகளுக்கான (1,000- க்கும் அதிகமானோர்) கொள்ளளவு வரம்பை, 75 விழுக்காட்டிற்கு நாம் உயர்த்தவுள்ளோம்.

நான்காவது, வெளிப்புறங்களில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல. வெளிப்புறத்தில் கிருமிப்பரவலுக்கான அபாயம் மிகவும் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். ஆனால், உட்புறங்களில் முகக் கவசங்கள் அணியப்படுவது தொடர்ந்து கட்டாயமாக இருக்கும். இறுதியாக, பாதுகாப்பான தூர இடைவெளி சார்ந்த விதிமுறைகள் தற்போதைக்குத் தொடரும். அதன்படி, முகக் கவசம் அணியப்படாத சூழல்களில் கிருமிப்பரவலைக் குறைக்க, குழுக்களிடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். இந்த மாற்றங்கள் அடுத்த வரும் மார்ச் 29- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

அதே சமயத்தில், எல்லை தாண்டிய பயணங்களையும் கணிசமான அளவில், நாம் எளிதாக்கவிருக்கிறோம். முன்னதாக, ஓமிக்ரான் கிருமிவகையின் தாக்கம் குறித்த நிச்சயமற்ற போக்கால், நாம் எச்சரிக்கையுடன் செயல்பட்டோம். இப்போது, ஓமிக்ரான் பரவல் நன்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்முடைய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட உள்நாட்டில், சமூகத்தில் தோன்றியவைதான். கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களில், வெகு சிலரே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். எனவே, நாம் பாதுகாப்பாக, நமது எல்லைகளைத் திறந்துவிடலாம்.

“ஆகக் குறைவான கோவிட்-19 மரணங்கள் பதிவான உலக நாடுகளில் நாமும் ஒன்று”- சிங்கப்பூர் பிரதமர் உரை!

பயணிகளுக்கான நமது பரிசோதனை, தடைக்காப்பு விதிமுறைகளை நாம் பெருமளவில் குறைக்கவிருக்கிறோம். தடுப்பூசிப் போட்டோருக்கான எளிமையாக்கப்பட்ட இந்தப் பயணப்பாதைக் கட்டமைப்பு, சிங்கப்பூரர்கள் மேலும் எளிதாக வெளிநாடு செல்ல அனுமதிக்கும். கிட்டத்தட்ட கோவிட்-19 சூழலுக்கு முன்பைப் போன்று. இந்தக் கட்டமைப்பு, சிங்கப்பூருக்குள் நுழையும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்கிவிடும். இது சிங்கப்பூரை உலகத்துடன் மீண்டும் இணைக்கும்.

இது, நமது தொழில்களுக்கு, குறிப்பாகச் சுற்றுலாத் துறைக்கு அதிகம் தேவைப்படும் ஊக்கத்தை அளிக்கும். விமானத்துறை மையமாக சிங்கப்பூர் தமது நிலையை மீட்டெடுக்க அது உதவும். அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு மேல் விவரங்களை அறிவிக்கும்.

இன்றைய அறிவிப்புகளை, சரியான மனப்போக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் இயல்புநிலை மிக்க வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதோடு, குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருடன் பெரிய குழுக்களாக ஒன்றுகூடுதல், முகக் கவசமின்றி வெளிப்புறங்களுக்குச் செல்லுதல், வெளிநாடுகளில் உள்ள அன்புக்குரியவர்களுடன் இணைதல் ஆகியவற்றில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

ஆனால், எச்சரிக்கையாக இருப்பதைத் தவிர்க்க வேண்டாம். நாம் ஒவ்வொருவரும் நமது பங்கைத் தொடர்ந்து ஆற்றவேண்டும். புதிய பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்கவேண்டும். உங்களுக்கு உடல் நலமில்லை என்றால், உங்களை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள். உங்களுக்குக் கிருமித்திற்று உறுதிசெய்யப்பட்டால், உங்களை நீங்களே வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கிருமித்தொற்று இல்லையென்று தெரிய வந்து, நீங்கள் வெளியே செல்ல முடிவெடுத்தால், தயவுசெய்து, வெளிப்புறத்திலும்கூட, பிறரைப் பாதுகாக்க, முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்திடுங்கள். நாம் அனைவரும் தனிப்பட்ட, சமூகப் பொறுப்புணர்வைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்.

சிங்கப்பூரில் முகக்கவசம் அணிவது எங்கு கட்டாயம்? எங்கு கட்டாயம்மில்லை? – வாங்க பார்க்கலாம்!

நம்மை நலமாக வைத்திருக்க; பிறரைப் பாதுகாப்பாக வைத்திருக்க; நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிப்பதைத் தவிர்க்க. அவ்வகையில், புதிய பிரச்சினைகள் எழும்போது கூட, நாம் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சாத்தியம் அதிகமாக இருக்கும்; புதிய இயல்புநிலையை நோக்கிய பாதையில் நம்மால் தொடரமுடியும்.

கோவிட்-19 கிருமிக்கு எதிரான நமது போராட்டத்தில் நாம் நெடுந்தூரம் வந்துள்ளோம். நாம் இறுதிக்கோட்டினை நெருங்கிக் கொண்டிருந்தாலும் அதனை இன்னும் எட்டவில்லை. நமது நடவடிக்கைகளுக்கு முக்கியத் தூணாக விளங்கியது, தங்கள் அரசாங்கத்தின் மீதும், மருத்துவ அதிகாரிகள் மீதும், ஒருவர் மற்றொருவர் மீதும் சிங்கப்பூரர்கள் வைத்திருந்த நம்பிக்கையே.

நமது பயணம் முழுவதும், நாம் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து, ஆதரவளித்துள்ளோம். புதிய சவால்களைச் சமாளிக்கும் வேளையில், இந்த ஒருமைப்பாடு, இன்றியமையாததாகத் தொடர்கிறது. நீங்கள் அனைவரும் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நம் முயற்சிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி ஒன்றுபட்ட மக்களாக, இந்தக் கிருமிப்பரவலைக் கடந்து செல்வோம்.” இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.